சென்னிமலையில்கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுப்பு; போலீசார் குவிப்பு

சென்னிமலையில்கவர்னரை கண்டித்து  ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுப்பு; போலீசார் குவிப்பு
x

தமிழக கவர்னரை கண்டித்து சென்னிமலையில் பல்வேறு அமைப்பினர் சார்பில் நேற்று நடக்க இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் தடை விதித்தனர். மேலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு

சென்னிமலை

அனுமதி மறுப்பு

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு பெயர் தொடர்பாக பேசிய கருத்து பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதனை தி.மு.க மற்றும் அதன் ஆதரவு கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. மேலும் பல இடங்களில் கவர்னருக்கு எதிராக போராட்டங்களும் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் சென்னிமலை பஸ் நிலையம் முன்பு புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பை சேர்ந்த அ.செல்வராசு தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட அதன் சார்பு அமைப்புகள் சார்பில் கவர்னருக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சென்னிமலை போலீசார் நேற்று மதியம் திடீரென அனுமதி மறுத்தனர்.

ஒத்திவைப்பு

ஆனால் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினால் கைது செய்யும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் நேற்று மாலை 3 மணிக்கே சென்னிமலை பஸ் நிலையம் முன்பு குவிக்கப்பட்டனர்.

அப்போது ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்தவர்கள் அங்கு வந்து, கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து நடத்துவதாக இருந்த ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று பெரிய பேப்பரில் எழுதி ஒட்டிவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இந்த சம்பவத்தால் சென்னிமலையில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

Next Story