சின்னமுட்டத்தில் 3 மாதங்களாக கடலுக்கு செல்லாத விசைப்படகு மீனவர்கள்
புயல், மழை எச்சரிக்கையால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் கடந்த 3 மாதங்களாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
புயல், மழை எச்சரிக்கையால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் கடந்த 3 மாதங்களாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
புயல் எச்சரிக்கை
கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றன. இந்த விசைப்படகுகள் அனைத்தும் தினமும் அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்க சென்றுவிட்டு இரவு 9 மணிக்கு கரைக்கு திரும்புவது வழக்கம்.
இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் அடிக்கடி புயல், மழை ஏற்படுகிறது. மேலும் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து வருகிறது. கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு வந்தனர்.
3 மாதங்களாக...
இதைத்தொடர்ந்து சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தைச் சேர்ந்த விசைப்படகுகள் கடந்த 3 மாதங்களாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இந்த விசைப்படகுகள் அனைத்தும் துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
இதனால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்துக்கு மீன் வரத்து அடியோடு நின்றுவிட்டது. துறைமுகத்தில் உள்ள மீன்சந்தைகள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது.