சித்தோட்டில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

சித்தோட்டில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், பால், வீட்டு வரி, மின் கட்டண உயர்வை கண்டித்து சித்தோடு பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம், தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறும்போது, 'டாஸ்மாக் கடையை மூடுவதாக தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டனர். ஆனால் டாஸ்மாக் கடை தொடர்ந்து செயல்பட்டு வருவதால் பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, கேபிள் கட்டண உயர்வு போன்றவற்றால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர் இதற்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்' என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு, முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிச்சாமி, மாவட்ட மாணவர் அணி செயலாளர் ரத்தன் பிரதீப், பகுதி செயலாளர்கள் ஜெகதீஷ், கேசவமூர்த்தி, ஜெயலலிதா பேரவை மாவட்ட இணை செயலாளர் வீரக்குமார், ஒன்றிய செயலாளர் பூவேந்திர குமார், பகுதி அவைத்தலைவர் மீன் ராஜா, கங்காபுரம் முன்னாள் ஊராட்சி தலைவர் பொங்கி உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.