கூடலூர் பகுதியில்பள்ளி, கோவில்கள் அருகே போதைப்பொருட்கள் விற்பனை:நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்


கூடலூர் பகுதியில்பள்ளி, கோவில்கள் அருகே போதைப்பொருட்கள் விற்பனை:நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 26 Feb 2023 12:15 AM IST (Updated: 26 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தேனி

போதைப்பொருள் விற்பனை

கூடலூர் பகுதியில், பெட்டிக் கடைகளில் போதைப்பொருள் மற்றும் புகையிலைப் பொருட்கள் குறைந்த விலைக்கு கிடைக்கிறது. இதனால் வாலிபர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் இவற்றை வாங்கி பயன்படுத்தி போதைக்கு அடிமையாகி வருகின்றனர். புகையிலை பயன்படுத்துவதால் புற்றுநோய் வரும் என்று தெரிந்தும் அதன் விற்பனை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.

தேனி மாவட்டத்தின் அருகில் உள்ள கேரள மாநிலத்தில் போதை பாக்கு மற்றும் புகையிலை பொருட்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அதை மீறி விற்பனை செய்வது தெரிந்தால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று கேரள மாநில அரசு அறிவித்துள்ளது.

திடீர் சோதனை

இந்நிலையில் தமிழக-கேரள மாநில எல்லையான கூடலூர் நகர பகுதியில் பள்ளி மற்றும் கோவில்களுக்கு அருகில் உள்ள பெட்டிக் கடைகளில் போதை பாக்கு புகையிலை விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. கூடலூரில் போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர் சோதனை என்ற பெயரில் ஒரு சில கடைகளில் மட்டுமே ஆய்வு நடத்தி அபராதம் விதிக்கின்றனர். ஆனால் பெரும்பாலான கடைகளில் சோதனை நடத்துவது இல்லை. இதனால் கூடலூர் பகுதியில் போதை பொருட்கள் விற்பனை அதிகளவில் நடைபெறுகிறது.

எனவே மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூடலூர் நகர பகுதியில் பள்ளி கோவில்களுக்கு அருகில் உள்ள கடைகளில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க வேண்டும். மேலும் திடீர் சோதனை நடத்தி விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


Next Story