கடலூரில், கலெக்டர் பாலசுப்பிரமணியம் தேசிய கொடி ஏற்றினார்
கடலூரில் நடந்த சுதந்திர தின விழாவில் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தேசிய கொடி ஏற்றினார். தொடர்ந்து மாணவ- மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
கடலூர்,
75-வது சுதந்திர தின விழா நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா நடந்தது. விழாவுக்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் காலை 9.05 மணிக்கு வந்தார். அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் வரவேற்றார். தொடர்ந்து விழா மேடைக்கு வந்த கலெக்டர் அங்கு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
அதன்பிறகு மூவர்ண பலூன்களையும், சமாதான புறாக்களையும் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் பறக்க விட்டனர். அதையடுத்து கலெக்டர் பாலசுப்பிரமணியம், போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசனுடன் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார்.
பாராட்டு சான்றிதழ்
அதைத்தொடர்ந்து ஆயுதப்படை போலீசார், தீயணைப்பு துறை, ஊர்க்காவல் படை, தேசிய மாணவர் படை மாணவ- மாணவிகள் மிடுக்குடன் அணிவகுத்து வந்து மரியாதை செலுத்தினர். இதை கலெக்டர் ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து விழா மேடைக்கு அருகில் அமர்ந்திருந்த தியாகிகள், அவர்களது குடும்பத்தினருக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். மேலும் அந்தந்த பகுதி தாசில்தார்கள் மூலம் தியாகிகளின் வீட்டுக்கே சென்று அவர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 139 அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் பாலசுப்பிரணியம் பாராட்டு சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்தினார். மேலும் 65 பயனாளிகளுக்கு ரூ.26 லட்சத்து 75 ஆயிரத்து 892 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
கலைநிகழ்ச்சிகள்
வாண்டியாம்பள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பத்ரக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, கடலூர் திருப்பாதிரிப்புலியூர், குளோபல் சிறப்பு பள்ளி, வேணுகோபாலபுரம் ஸ்ரீ வரதம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கடலூர் ஓயாசீஸ் சிறப்பு பள்ளி, காரைக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் விலங்குகளை பாதுகாத்தல், சுதந்திர போரட்ட தியாகி அஞ்சலையம்மாள், திருப்பூர் குமரன், சுதந்திர தின விழிப்புணர்வு, கலா சாரத்தை பாதுகாத்தல், பாரம்பரிய கலைகளை பாதுகாத்தல், வேற்றுமையில் ஒற்றுமை ஆகிய தலைப்புகளில் நடனமாடி, நாடகம் நடித்து பார்வையாளர்களை கவர்ந்தனர். மாணவர்களின் நடனத்திற்கு பார்வையாளர்கள் கைதட்டி உற்சாக மூட்டினர். சிறப்பாக கலைநிகழ்ச்சி நடத்திய பள்ளிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது. விழாவில் அய்யப்பன் எம்.எல்.ஏ., கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், கூடுதல் கலெக்டர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர், கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, தாசில்தார் பூபாலசந்திரன், மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் உள்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.