கடலூர் மாவட்டத்தில் ஆற்றுத்திருவிழா கோலாகலம் பக்தர்கள் முன்னிலையில் சாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது


கடலூர் மாவட்டத்தில் ஆற்றுத்திருவிழா கோலாகலம் பக்தர்கள் முன்னிலையில் சாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது
x
தினத்தந்தி 20 Jan 2023 12:15 AM IST (Updated: 20 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் ஆற்றுத்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் தீர்த்தவாரிக்காக எழுந்தருளிய சாமிகளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர்.

கடலூர்

தேவர்களுக்கு தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள 6 மாதங்கள் பகல் பொழுதாகவும் (உத்திராயண புண்ணியகாலம்), ஆடி முதல் மார்கழி வரை உள்ள 6 மாதங்கள் இரவாகவும் (தட்சிணாயண புண்ணியகாலம்) இருக்கும் என்பது ஐதீகம். உத்திராயண புண்ணிய காலத்தின் தொடக்க நாளான தை முதல் நாளில் இருந்து 5-வது நாளில் ஆற்றுத்திருவிழா கொண்டாடப்படுகிறது.

கடலூர் மாவட்டத்தில் தென்பெண்ணையாற்றில் நடைபெறும் ஆற்றுத்திருவிழா தனி சிறப்பு மிக்க ஒன்றாகும். இதில் கடலூர் பகுதியில் உள்ள கோவில்களில் இருந்து உற்சவ சாமிகள் கடலூர் தென்பெண்ணையாற்றுக்கு கொண்டு வரப்பட்டு அங்கு சாமிகளுக்கு தீர்த்தவாரி நடைபெறும்.

அந்த வகையில் நேற்று ஆற்றுத்திருவிழா மாவட்டத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக ஆற்றுத்திருவிழா நடைபெறவில்லை. 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று ஆற்றுத்திருவிழா நடைபெற்றதால் விழா களைகட்டி இருந்தது.

ஊர்வலம்

அந்த வகையில் மாவட்டத்தின் தலைநகரான கடலூரில் கடலூர்- புதுச்சேரி தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தின் வலது புறம் தென்பெண்ணையாற்றின் கரையோரம் ஆற்றுத்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு காலை முதலே அருகில் உள்ள கோவில்களில் இருந்து அலங்கரித்து வைக்கப்பட்ட உற்சவ மூர்த்திகள் டிராக்டர், மினி லாரி போன்ற வாகனங்களில் வைத்து மேள, தாள இசையுடன் ஊர்வலமாக புறப்பட்டது.

தீர்த்தவாரி

முக்கிய வீதிகள் வழியாக வந்த இந்த ஊர்வலம் கடலூர் தென்பெண்ணை ஆற்றங்கரையை வந்தடைந்தது. இதில் கடலூர் பாடலீஸ்வரர், ஆணைக்குப்பம் நாகக்கன்னி அம்மன், குண்டுஉப்பலவாடி முத்துமாரியம்மன், உச்சிமாகாளி அம்மன், உச்சிமேடு ஏழைமாரியம்மன், புட்லாயிஅம்மன், 108 கரக சுப்பிரமணியசுவாமி, இரட்டைபிள்ளையார் களத்து மாரியம்மன், புதுச்சேரி வண்ணாங்குளம் முத்துமாரியம்மன், கிருமாம்பாக்கம் சோலைவாழியம்மன், மஞ்சக்குப்பம் புத்துநாகம்மன் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து சாமிகள் வந்தது.

தொடர்ந்து அங்கு உற்சவ மூர்த்திகளுக்கு தீர்த்தவாரியும், சிறப்பு வழிபாடும் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பாதுகாப்பு

விழாவையொட்டி சாலைக்கரை மாரியம்மன்கோவில் அருகில் இருந்து ஆற்றங்கரை வரை சாலையின் இரு புறமும் பல்வேறு கடைகள் வைக்கப்பட்டு இருந்தன. அதில் விளையாட்டு பொம்மைகள், வளையல்கள், மண் பானைகள், இனிப்பு வகைகள், கரும்புச்சாறு, சிறுவள்ளி கிழங்கு, சேப்பங்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

சிறுவர்களுக்கான ராட்டினம் உள்ளிட்ட பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள் இடம் பெற்றிருந்தது. விழாவையொட்டி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் மேற்பார்வையில் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருவந்திபுரம் தேவநாதசாமி

இதேபோன்று, திருவந்திபுரம் தேவநாதசாமிக்கு அதிகாலை 2 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீ தேவி, பூ தேவியுடன் தேவநாதசாமி மற்றும் தேசிகர் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் கோவிலில் இருந்து புறப்பட்டு, நத்தப்பட்டு தென்பெண்ணையாற்றுக்கு சென்றார். தொடர்ந்து அங்கு சாமிக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் சாமி வீதிஉலா நடைபெற்று, மாலையில் கோவிலுக்கு சென்றடைந்தது. இதன் காரணமாக நேற்று காலை முதல் திருவந்திபுரம் கோவில் நடை சாற்றப்பட்டு இருந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

நெல்லிக்குப்பம்

நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள முள்ளிகிராம்பட்டு, அழகியநத்தம், மேல்பட்டாம்பாக்கம், விஸ்வநாதபுரம், வான்பாக்கம், வெள்ளப்பாக்கம், மருதாடு ஆகிய 7 இடங்களில் உள்ள தென்பெண்ணையாற்றில் ஆற்றுத்திருவிழா நடைபெற்றது. கீழ்பட்டாம்பாக்கம் கோதண்டராமர், ரத்தினம் தெரு சக்தி விநாயகர், செல்லியம்மன், முத்துமாரியம்மன், வேணுகோபால்சாமி உள்பட 20-க்கும் மேற்பட்ட கோவில்களில் இருந்து உற்சவ மூர்த்திகளை மாட்டு வண்டிகளில் முள்ளிகிராம்பட்டு ஆற்றுக்கு கொண்டு வந்தனர். பின்னர் சாமிகளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.

கண்டரக்கோட்டை

பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்றில் ஆற்றுத்திருவிழா நடைபெற்றது. இதில் பண்ருட்டி எல்.என்.புரம், பூங்குணம், கள்ளிப்பட்டு, பெரிய கள்ளிப்பட்டு, திருத்துறையூர் அவியனூர், நல்லூர், ராசாபாளையம், மாளிகை மேடு, விழுப்புரம் மாவட்டம் வாக்கூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து முருகர், விநாயகர், பெருமாள், முத்து மாரியம்மன், சக்திமாரியம்மன், காளியம்மன் உள்ளிட்ட உற்சவமூர்த்திகள் வாகனங்களில் கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து சாமிகளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story