கடலூர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி இயங்கிய 14 மர இழைப்பகங்களுக்கு 'சீல்' வனத்துறையினர் நடவடிக்கை


கடலூர் மாவட்டத்தில்  விதிமுறைகளை மீறி இயங்கிய 14 மர இழைப்பகங்களுக்கு சீல்  வனத்துறையினர் நடவடிக்கை
x
தினத்தந்தி 15 Oct 2022 12:15 AM IST (Updated: 15 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில், விதிமுறைகளை மீறி இயங்கிய 14 மர இழைப்பகங்களுக்கு வனத்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட மர இழைப்பகங்கள் உள்ளன. இந்த மர இழைப்பகங்களில் கட்டில், பீரோ, ஜன்னல், கதவு உள்ளிட்ட பல்வேறு வகையான மர சாமான்கள் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில இழைப்பகங்களில் மரங்களை அறுத்து பலகையாக விற்பனை செய்து வருகிறார்கள்.

ஆனால் இவற்றை சிலர் வனத்துறையினரிடம் அனுமதி பெறாமலும், சிலர் உரிமத்தை புதுப்பிக்காமலும் நடத்தி வருவதாக புகார் வந்தது. இதையடுத்து மாவட்ட வனத்துறை அலுவலர் உத்தரவின்பேரில் வனச்சரக அலுவலர் அப்துல் ஹமீது மற்றும் வனத்துறை அலுவலர்கள் கடலூர், குறிஞ்சிப்பாடி, நடுவீரப்பட்டு, பண்ருட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினர்.

14 மர இழைப்பகங்களுக்கு 'சீல்'

அப்போது குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள 3 மர இழைப்பகங்கள், நடுவீரப்பட்டு பகுதியில் 6 மர இழைப்பகங்கள், பண்ருட்டி பகுதியில் 5 மர இழைப்பகங்கள் என 14 மர இழைப்பகங்கள் விதிமுறைகளை மீறி இயங்கி வந்தது தெரிந்தது. குறிப்பாக 13 மர இழைப்பகங்கள் முன் அனுமதி பெறாமலும், 1 மர இழைப்பகம் முன் அனுமதியை புதுப்பிக்காமலும் இயங்கி வந்தது. இதையடுத்து 14 மர இழைப்பகங்களையும் வனத்துறை அதிகாரிகள் 'சீல்' வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

தொடர்ந்து மாவட்டத்தில் அனுமதியின்றி மர இழைப்பகங்கள் நடத்தினாலும், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை உரிமத்தை புதுப்பிக்காமல் செயல்படுத்தினாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.


Next Story