கடலூர் மாவட்டத்தில் மஞ்சப்பை பயன்பாட்டை ஊக்குவிக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு விருது கலெக்டர் தகவல்
கடலூர் மாவட்டத்தில் மஞ்சப்பை பயன்பாட்டை ஊக்குவிக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு விருது வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
"மீண்டும் மஞ்சப்பை" பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் 2022-23-ம் நிதியாண்டுக்கான மஞ்சப்பை விருதுகளை சட்டப் பேரவையில் அறிவித்தார். அதன்படி ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழியின் (பிளாஸ்டிக்) தடையை திறம்பட செயல்படுத்தி, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு இது வழங்கப்படும்.
இது ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கேரி பேக்குகள் மற்றும் இவற்றுக்கு மாற்றாக பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றாக மஞ்சப்பை (மஞ்சள் துணி பை) போன்ற பாரம்பரியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு இந்த விருது வழங்கப்படும்.
முன்மாதிரி பள்ளிகள்
இந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக தங்களுடைய வளாகங்கள்/ சுற்றுப்புறங்கள் மற்றும் வளாக பகுதியை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்ற ஊக்குவிப்பதில் முன்மாதிரியாக திகழும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகளை வழங்கி கவுரவிக்க முன்வந்துள்ளது.
இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் https://cuddalore.nic.inஎன்ற இணையதளத்தில் கிடைக்கும். இந்த விண்ணப்ப படிவத்தில் தனிநபர், நிறுவனத் தலைவர் முறையாக கையொப்பமிட வேண்டும். கையொப்பமிட்ட பிரதிகள் இரண்டு மற்றும் குறுவட்டு பிரதிகள் இரண்டை மாவட்ட கலெக்டரிடம் 1.5.2023-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேற்கண்ட தகவல் கடலூா் மாவட்ட கலெக்டா் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.