கடலூரில், ஒருங்கிணைந்த உடனடி கடன் மேளா


கடலூரில், ஒருங்கிணைந்த உடனடி கடன் மேளா
x
தினத்தந்தி 15 Jun 2023 6:45 PM GMT (Updated: 15 Jun 2023 6:46 PM GMT)

கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் கடலூரில், ஒருங்கிணைந்த உடனடி கடன் மேளா நடைபெற்றது.

கடலூர்

கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையகத்திற்கு அருகில் உள்ள தலைமையகம், புதுப்பாளையம், மஞ்சக்குப்பம், செம்மண்டலம், திருப்பாதிரிப்புலியூர், கடலூர் முதுநகர், கூத்தப்பாக்கம், நெல்லிக்குப்பம் மற்றும் பண்ருட்டி கிளைகளுக்கான ஒருங்கிணைந்த உடனடி கடன் மேளா நேற்று கடலூரில் நடைபெற்றது. இதற்கு வங்கியின் மேலாண்மை இயக்குனர் திலீப்குமார் தலைமை தாங்கினார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் சிறுபான்மைத்துறை துணை ஆட்சியர் சங்கர், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பழனிமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கடன் மேளாவில் பொதுமக்களுக்கு சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டு, மகளிர் சுயஉதவிக்குழு கடன், ஊதியம் பெறும் மகளிர் கடன், ஆதரவற்ற கைம்பெண்கள் கடன், மாற்றுத்திறனாளி கடன், சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் கடன், வீட்டு வசதி கடன், வீடு அடமானக்கடன், விவசாயம் சார்ந்த மத்திய காலக்கடன், நாட்டுப்புற கலைஞர்களுக்கான கடன், டாம்கோ, டாப்செட்கோ, தனிநபர் மற்றும் குழு கடன்களுக்கான 700 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

விண்ணப்பம் பரிசீலனை

இதில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் ஒரு வார காலத்திற்குள் பரிசீலிக்கப்பட்டு கடன் வழங்கப்படும்.

இதில் உதவி பொது மேலாளர்கள் செந்தமிழ்செல்வி, பலராமன், அருள், இளங்கோ, மலர்விழி மற்றும் கிளை மேலாளர்கள், பணியாளர்கள், மகளிர் திட்ட சமுதாய ஒருங்கிணைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கடன் மேளா வருகிற 20-ந் தேதி விருத்தாசலத்திலும், 21-ந் தேதி வடலூரிலும், 22-ந் தேதி புவனகிரியிலும் நடைபெற உள்ளது.


Next Story