கடலூரில் பயங்கரம் ஊராட்சி தலைவியின் கணவர் ஓட ஓட விரட்டி படுகொலை
கடலூரில் ஊராட்சி தலைவியின் கணவர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார்.
கடலூர்,
கடலூர் தாழங்குடாவை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் மதியழகன் (வயது 45), மீனவர். இவருடைய மனைவி சாந்தி(40). இவர் குண்டு உப்பலவாடி ஊராட்சி தலைவராக உள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மதியழகன், தற்போது கடலூர் மஞ்சக்குப்பம் ஜெகதேவ் நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
நேற்று காலை 8 மணி அளவில் மதியழகன், அதே பகுதியில் உள்ள சிவன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அங்கு அவர் சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வந்தபோது, 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கும்பல் கத்தி, வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அவரை விரட்டினர்.
ஓட ஓட விரட்டி கொலை
இதனால் பதறிபோன மதியழகன், கூச்சலிட்டபடி நடுரோட்டில் ஓடினார். இருப்பினும் அந்த கும்பல் ஓட ஓட விரட்டிச் சென்று மதியழகனை சரமாரியாக வெட்டினர். இதில் அவர் துடிதுடித்து பரிதாபமாக பலியானார். இதையடுத்து அந்த கும்பல் தப்பிச்சென்றுவிட்டது. பட்டப்பகலில் நடந்த இந்த படுகொலை தொடர்பாக கடலூர் புதுநகர் போலீசார் விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கடந்த 2020-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் தாழங்குடாவை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாசிலாமணி மனைவி பிரவினாவும், மதியழகன் மனைவி சாந்தியும் குண்டுஉப்பலவாடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். இதில் சாந்தி வெற்றி பெற்றார்.
பழிக்கு பழியா?
இந்த தேர்தல் தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதற்கிடையே 1.8.2020 அன்று இரவு மதியழகன் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து மாசிலாமணியின் தம்பி மதிவாணனை (36) வெட்டிக்கொலை செய்தார். இந்த கொலை தொடர்பாக மதியழகன் உள்ளிட்ட 15 பேரை போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு சிறையில் இருந்து வெளியே வந்த மதியழகன், சொந்த ஊரான தாழங்குடாவுக்கு சென்றால், மாசிலாமணி தரப்பால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என கருதி, ஊருக்கு செல்லாமல் மஞ்சக்குப்பத்திலேயே இருந்து வந்ததும் தெரியவந்தது.
இதனால் மதிவாணன் கொலை வழக்கில் பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை தொடர்பாக 10 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.