கடலூரில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல் குறித்த கலந்தாய்வு கூட்டம்
கடலூரில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுத்தல், குறைத்தல் மற்றும் தீர்வு காணுதல் குறித்த கலந்தாய்வு கூட்டம் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (இணையவழி குற்றப்பிரிவு) சீனிவாசலு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எழிலரசி கலந்து கொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், குழந்தை திருமணம் தடுப்பு, பாலியல் தாக்குதல், செல்போனில் ஆபாச படங்கள் வந்தால் புகார் செய்வது, சிறார்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்தும், அக்குற்றங்களை கையாளுவது எப்படி, சட்ட திருத்தங்களை எப்படி எதிர்கொள்வது, பதிவு செய்யப்படும் வழக்குகளை எப்படி விரைவாக முடிப்பது என்பது பற்றியும் விளக்கி கூறினார். இதில் கடலூர் மாவட்ட சமூக நல அலுவலர் சித்ரா, புதுச்சேரி நிர்வாக அறங்காவலர் லலிதாம்பாள், கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கெஜலட்சுமி, இன்ஸ்பெக்டர்கள் மகேஷ்வரி, வனஜா, விஜி, சரஸ்வதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.