கடலூரில் மாநில அளவிலான வில்வித்தை போட்டி 200 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
கடலூரில் மாநில அளவிலான வில்வித்தை போட்டி நடைபெற்றது. இதில் 200 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு இளைஞர் கள வில்வித்தை சங்கம் அறிவுறுத்தலின் பேரில் கடலூர் இளைஞர் கள வில்வித்தை சங்கம் சார்பில் 3-வது மாநில அளவிலான வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி கடலூர் புனித வளனார் கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. போட்டிக்கு சங்க தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். நிர்வாகி சுந்தர் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் செந்தில் வரவேற்றார். போட்டியை டாக்டர் பிரவீன் அய்யப்பன் தொடங்கி வைத்தார். போட்டியில் மாநில பொதுச்செயலாளர் ரத்தினசபாபதி கலந்து கொண்டு பேசினார்.
இந்த போட்டியில் விழுப்புரம், மயிலாடுதுறை, தூத்துக்குடி, சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், தேனி, மதுரை உள்பட 14 மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். அவர்களை 10, 12, 14, 17 வயதுக்குட்பட்டோர் பிரிவாக பிரித்து, போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் அகில இந்திய அளவிலான வில்வித்தை போட்டிக்கு தகுதி பெற்றதாக தலைவர் தெரிவித்தார். முடிவில் இணை செயலாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.