தாயின் உறவினர்கள் வசம் இருந்தான்: 5 வயது சிறுவனின் பரிதவிப்புக்கு மனம் இரங்கிய நீதிபதிகள் - தந்தையுடன் அனுப்பி வைக்க உத்தரவிட்டனர்


தாயின் உறவினர்கள் வசம் இருந்தான்: 5 வயது சிறுவனின் பரிதவிப்புக்கு மனம் இரங்கிய நீதிபதிகள்  - தந்தையுடன் அனுப்பி வைக்க உத்தரவிட்டனர்
x

5 வயது சிறுவனின் பரிதவிப்புக்கு மனம் இரங்கி அவனை தந்தை வசம் ஒப்படைத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


5 வயது சிறுவனின் பரிதவிப்புக்கு மனம் இரங்கி அவனை தந்தை வசம் ஒப்படைத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

பெண் தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த தினேஷ்குமார் சார்பில் அவரது தந்தை ராஜேந்திரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

எனது மகன் தினேஷ்குமாருக்கும், அபிநயா என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு 5 வயதில் ஹர்ஷித்குமார் என்ற மகன் உள்ளான். எனது மகன் அபுதாபியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதற்காக அவர், மனைவி, மகனுடன் அங்கேயே வசித்து வந்தார். ஹர்ஷித்குமார் அங்குள்ள பள்ளியில் படித்து வந்தான்.

அபிநயா உளவியல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதுபற்றி அவருடைய பெற்றோருக்கும் நன்றாக தெரியும். இந்த நிலையில் கடந்த 7.6.2022 அன்று அபிநயா, அபுதாபியில் உள்ள வீட்டில் தனியாக இருக்கும் போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை அபுதாபி போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் அவர் தற்கொலை செய்தது உறுதியானது. பின்னர் அவரது உடலை என் மகனிடம் ஒப்படைத்தனர்.

மகனை பறித்தனர்

அபிநயாவின் உடலுடன், தினேஷ், அவரது மகன் ஆகியோர் விமானம் மூலம் திருச்சி வந்தனர். அங்கு விமான நிலையத்தில் தினேசை தாக்கிய அபிநயாவின் உறவினர்கள், ஹர்ஷித்தையும், அவனது பாஸ்போர்ட்டையும் பறித்துக் கொண்டனர். அவனை எங்களிடம் ஒப்படைக்கும்படி புகார் அளித்தும் பலன் இல்லை. எனவே ஹர்ஷித்குமாரை எங்களிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, கடந்த சில மாதங்களாக தாயாரின் உறவினர்களின் அரவணைப்பில் இருந்த ஹர்ஷித்தை ஒரு சில நாட்கள் 3 மணி நேரம் மட்டும் அவரது தந்தையிடம் ஒப்படைக்கும்படி அபிநயாவின் உறவினர்களுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அவர்கள் அந்த உத்தரவை பின்பற்றாமல், அதை திருத்தம் செய்யும்படி மற்றொரு மனுவை தாக்கல் செய்தனர். இந்த மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு, ஹர்ஷித்தை 5 நாட்கள் தினேசிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டது. அதன்படி ஹர்ஷித் ஒப்படைக்கப்பட்டான்.

தந்தையிடம் சிறுவன் ஒப்படைப்பு

இந்தநிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தர்மோகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சிறுவன் ஹர்ஷித்குமார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டான். தினேசும் ஆஜரானார். அப்போது தனது தந்தையுடன்தான் செல்வேன் என ஹர்ஷித்குமார் கதறி அழுதான்.

இதையடுத்து நீதிபதிகள், அந்த சிறுவனிடம், யாருடன் செல்ல விரும்புகிறாய் என கேட்டனர். அதற்கு அவன், தந்தையுடன்தான் செல்வேன் என்பதை அப்பா... அப்பா... என கையை நீட்டி கதறி அழுதான். தினேசும் தன் மகனை பார்த்து கண்கலங்கியபடி நின்றார்.

ஆனால் அபிநயாவின் உறவினர்கள் தரப்பில் சிறுவனை, தினேசுடன் அனுப்பி வைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ஆனால் சூழ்நிலையை கருத்தில் கொண்டு மனம் இரங்கிய நீதிபதிகள், சிறுவன் ஹர்ஷித்குமாரை அவரது தந்தை தினேசிடம் ஒப்படைக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். தந்தை-மகன் பாசப்போராட்டமானது, கோர்ட்டில் இருந்த அனைவரையும் கனத்த இதயத்துடன் வெளியேறச்செய்தது.


Next Story