வெவ்வேறு சம்பவங்களில் வாலிபர் உட்பட 2 பேர் தற்கொலை
கூடலூர், பெரியகுளம் பகுதியில் வெவ்வேறு சம்பவங்களில் வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
கூடலூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வெட்டுக்காடு அருகே வேளாங்காடு வனப்பகுதியில் வனவர் திருமுருகன், வனக்காப்பாளர் கர்ணன் மற்றும் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது வனப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதைக்கண்ட வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் லோயர்கேம்ப் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து லோயர்கேம்ப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்தன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் கூடலூர் 13-வது வார்டு எம்.ஜி.ஆர். காலனியைச் சேர்ந்த சமயன் (வயது 28) என்பதும், தூக்குப்போட்டு தற்கொலை செய்ததும் தெரியவந்தது. ஆனால் அவர் தற்கொலை செய்ததற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமயனுக்கு இன்னும் திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மனைவி நாகலட்சுமி (28). நேற்று முன்தினம் இந்த தம்பதிக்கும், அதே பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மன வேதனை அடைந்த நாகலட்சுமி வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இ்துகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.