வெவ்வேறு சம்பவங்களில்வாலிபர் உள்பட 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை
வெவ்வேறு சம்பவங்களில் தூக்குப்போட்டு வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
வாலிபர் தற்கொலை
பெரியகுளம் தென்கரையை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் தாமோதரக்கண்ணன் (வயது 25), இவர் கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள ஒரு பர்னிச்சர் கடையில் வேலை செய்து வந்தார். அப்போது ஒரு பெண்ணை ஒருதலை பட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த காதலை அந்த பெண் ஏற்கவில்லை. இதனால் தாமோதரக்கண்ணன் மன விரக்தியில் இருந்து வந்தார்.
இந்நிலையில் கேரளாவில் இருந்து நேற்று முன்தினம் பெரியகுளத்தில் உள்ள வீட்டிற்கு அவர் வந்தார். அன்று இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது சேலையால் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தென்கரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தாமோதரக்கண்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வியாபாரி சாவு
கம்பம் நந்தகோபால் சாமி தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். பாத்திரங்களை வாடகைக்கு கொடுக்கும் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் இளம்பருதி (37). இவர், தந்தை நடத்தும் கடையை கவனித்து வந்தார். இளம்பருதிக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது மனைவி பிரியா, அவரது குடும்பத்தினர் கண்டித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இளம்பருதி வாடகைக்கு சென்ற பாத்திரங்களை இறக்கி வைத்துவிட்டு கடையில் இருந்தார்
இரவு 11 மணி அளவில் அவர் கடையை உள்புறமாக பூட்டிவிட்டு உள்ளே சென்றார். அதன்பின்னர் வெகுநேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இளம்பருதி தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார். உடனே அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.