வெவ்வேறு சம்பவங்களில்சிறுவன் உள்பட 3 பேர் தற்கொலை
வெவ்வேறு சம்பவங்களில் சிறுவன் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
வயிற்று வலி
போடி மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 50). கூலித்தொழிலாளி. இவரது மனைவி அய்யம்மாள். கடந்த சில மாதங்களாக முருகன் வயிற்று வலியால் அவதியடைந்து வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த முருகன் வலி தாங்க முடியாமல் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைக்கண்ட அய்யம்மாள் அவரை மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேவாரம் ஜெ.நகர் வடக்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (60). இவரது மருமகன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் தனது மகளை நினைத்து மணிகண்டன் கவலையில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது மணிகண்டன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிசிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தேவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுவன் தற்கொலை
உத்தமபாளையம் அருகே உள்ள காக்கில் சிக்கையன்பட்டி 15-வது வார்டு ஓனித்தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் சந்தோஷ் (16). இவர், 9-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் இவர் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்ததற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.