வெவ்வேறு சம்பவங்களில்விவசாயி உள்பட 4 பேர் தற்கொலை
வெவ்வேறு சம்பவங்களில் விவசாயி உள்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
விவசாயி தற்கொலை
போடி அருகே உள்ள மங்கம்மாள் சாலையை சேர்ந்தவர் தவமணி (வயது 48). விவசாயி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் இடப்பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் தவமணி மன வருத்தத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தவமணி தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த போடி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் தவமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது மனைவி மகாலட்சுமி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியகுளம் அருகே உள்ள பங்களாப்பட்டியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மனைவி சந்தனசெல்வி (21). இவர்கள் இருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சந்தனசெல்வி அடிக்கடி வயிற்று வலியால் அவதியடைந்து வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுவில் விஷம்
பெரியகுளம் அருகே உள்ள வடுகப்பட்டியை சேர்ந்தவர் ஜெயராமன் (37). இவர், உடல்நிலை குறைவால் அவதியடைந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் மதுவில் விஷத்தை கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயராமன் பரிதாபமாக இறந்தார்.
இதேபோல், வடுகப்பட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து (47). தொழிலாளி. நேற்று முன்தினம் இவர் வீட்டில் அரளி விதையை அரைத்து தின்று தற்கொலைக்கு முயன்றார். குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.