திண்டுக்கல்லில் களைகட்டிய தீபாவளி பொருட்கள் விற்பனை
திண்டுக்கல்லில், கடைசி நாளில் தீபாவளி பொருட்கள் விற்பனை களைகட்டியது.
தீபாவளி பொருட்கள் விற்பனை
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடந்த சில நாட்களாகவே திண்டுக்கல்லில் ஆடை, பட்டாசு, இனிப்பு வகைகள், பலகாரங்கள் உள்பட பல்வேறு பொருட்களின் விற்பனை படுஜோராக நடந்து வந்தது. இதன் காரணமாக கடைவீதிகளில் கடந்த சில நாட்களாகவே பொதுமக்கள் கூட்டம் இருந்து வந்தது. திண்டுக்கல் மட்டும் இன்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்களும் தீபாவளி பொருட்கள் வாங்குவதற்காக திண்டுக்கல்லுக்கு வரத்தொடங்கினர்.
இதனால் நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்பட இருப்பதால், பண்டிகை கொண்டாட்டத்துக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்குவதற்கு நேற்று கடைசி நாள் ஆகும். இதனால் ஜவுளி கடைகள், பலகாரம், இனிப்பு விற்பனை, பட்டாசு விற்பனை, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகள் ஆகியவற்றில் நேற்று வழக்கத்தைவிட இருமடங்கு மக்கள் கூட்டம் இருந்தது.
தற்காலிக கடைகள்
மேலும் மாநகராட்சி அலுவலக சாலை, கிழக்கு ரதவீதி, கமலாநேரு மருத்துவமனை சாலை ஆகியவற்றில் 500-க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டன. அதேபோல் ஆடைகளை வாகனங்களில் வைத்தும், தோள்பட்டையில் சுமந்தபடியும் ஏராளமானோர் மக்கள் கூட்டத்துக்கு இடையே சென்று வியாபாரம் செய்தனர்.
பொதுமக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால் மாநகராட்சி அலுவலக சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அதேபோல் ரதவீதிகளிலும் தற்காலிக தடுப்புகள் வைக்கப்பட்டன. ஆனாலும் பலர் இருசக்கர வாகனங்களில் கூட்ட நெரிசல் பகுதிக்குள் சென்றனர். பின்னர் கூட்டத்தை கடந்து செல்ல முடியாமல் வந்த வழியிலேயே திரும்பி சென்றனர்.
போலீசார் கண்காணிப்பு
மேலும் கடைவீதிக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் சத்திரம் சாலை, தெற்கு ரதவீதி வழியாக திருப்பி விடப்பட்டன. இதன் காரணமாக நகரில் பல சாலைகளில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. எனவே நெரிசலை தடுக்க போலீசார் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அதேபோல் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணிப்பதற்காக போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின் பேரில் ஏராளமான போலீசார் கடைவீதிகளில் குவிக்கப்பட்டனர். அவர்கள் சந்தேகப்படும்படி நபர்கள் யாரேனும் சுற்றித்திரிகின்றனரா? என தீவிரமாக கண்காணித்தனர்.