எல்லப்பாளையம் பகுதியில்ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு
எல்லப்பாளையம் பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தொிவித்தனா்
ஈரோடு எல்லப்பாளையம் கிழக்கு வீதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், கடந்த 40 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான குளம் உள்ளது. ஆகாயத்தாமரை, பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பியுள்ள அந்த குளத்தை தூர்வாரி, பூங்கா, நடைபாதை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. மேலும் குளத்தையொட்டி அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள 6 வீடுகளை அகற்றி விட்டு, குளத்தை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர்களுக்கு அதே பகுதியில் மாற்று இடமும் வழங்கப்பட்டது. அதன்பின்னர் வீடுகளை அகற்றக்கோரி, சம்பந்தப்பட்டவர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம், கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக நோட்டீஸ் அனுப்பியதாக தெரிகிறது. ஆனால், சம்பந்தப்பட்டவர்களுக்கு மாற்று இடத்துக்கான பட்டா வழங்காததால் அவர்கள் தங்களது வீடுகளை காலி செய்யவில்லை.
இந்த நிலையில் ஆக்கிரமிப்பில் இருக்கும் வீடுகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் சம்பந்தப்பட்ட இடத்துக்கு நேற்று சென்றனர். அப்போது, அங்கிருந்தவர்கள் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அங்கு தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவனுக்கும், தி.மு.க. மாநகர செயலாளர் சுப்பிரமணியனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை அதிகாரிகள் கைவிட்டு அங்கிருந்து திரும்பி சென்றனர். இதையொட்டி அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.