ஈரோட்டில், மேம்பாலத்தில் அரசு பஸ் மோதி விபத்து: டிரைவர் -கண்டக்டர் உள்பட 21 பேர் காயம்
ஈரோட்டில், அரசு பஸ் மேம்பாலத்தில் மோதிய விபத்தில் டிரைவர் -கண்டக்டர் உள்பட 21 பேர் காயம் அடைந்தனர்.
ஈரோடு
ஈரோட்டில், அரசு பஸ் மேம்பாலத்தில் மோதிய விபத்தில் டிரைவர் -கண்டக்டர் உள்பட 21 பேர் காயம் அடைந்தனர்.
மேம்பாலத்தில் பஸ் மோதல்
ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து 40 பயணிகளுடன் ஊட்டியை நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று காலை 8.45 மணிக்கு புறப்பட்டது. இந்த பஸ்சை மேட்டுப்பாளையம் அன்னூர் ரோடு பகுதியை சேர்ந்த டிரைவர் சக்திவேல் (வயது 52) என்பவர் ஓட்டினார். கண்டக்டராக கோவை மாவட்டம் திருமலை நாயக்கன் பாளையம் ஜோதிபுரம் பகுதியை சேர்ந்த வெள்ளியங்கிரி (55) இருந்தார்.
ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதியை தாண்டி பெருந்துறை ரோட்டில் சென்றபோது அங்கு பஸ் நிறுத்தத்தில் 2 பஸ்கள் நின்று கொண்டு இருந்தது. இதனால் அந்த பஸ்களை முந்திச்செல்ல சக்திவேல் முயன்றபோது, பஸ் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக மேம்பாலத்தில் பயங்கரமாக மோதியது. இதனால் பஸ்சில் பயணம் செய்தவர்கள் கூச்சலிட்டனர். பஸ்சின் முன்பகுதி மற்றும் அனைத்து கண்ணாடிகளும் உடைந்து நொறுங்கியது.
21 பேர் காயம்
இந்த விபத்தில் திருச்சி துறையூர் பகுதியை சேர்ந்த துரைராஜ் (60) என்பவர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். டிரைவர் சக்திவேலுக்கு காலில் பலத்த காயமும், கண்டக்டர் வெள்ளியங்கிரிக்கு தலையில் காயமும் ஏற்பட்டது. மேலும் பஸ்சில் பயணம் செய்த 6 பெண்கள் உள்பட 18 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பயணிகள் 15 பேர் முதல் உதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
டிரைவர் சக்திவேல், கண்டக்டர் வெள்ளியங்கிரி, துரைராஜ் மற்றும் பஸ்சில் பயணித்த பயணிகளான கரூரை சேர்ந்த அன்புதாஸ் (32), திண்டுக்கல் மாவட்டம் ஆர்.என்.டி.சி. நகரை சேர்ந்த முத்துசாமி (42), பவானி பருவாச்சி சக்தி நகர் பகுதியை சேர்ந்த அர்ஜுனன் (60) ஆகிய 6 பேர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.