ஈரோடு மாநகராட்சியில்பொதுமக்கள் புகார் அளிக்க 'கியூஆர்' கோடு அறிமுகம்;வீடு, வீடாக ஒட்டும் பணி தீவிரம்


ஈரோடு மாநகராட்சியில்பொதுமக்கள் புகார் அளிக்க கியூஆர் கோடு அறிமுகம்;வீடு, வீடாக ஒட்டும் பணி தீவிரம்
x

ஈரோடு மாநகராட்சியில் பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் ‘கியூஆர்’ கோடு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதனை வீடு, வீடாக சென்று ஒட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஈரோடு

ஈரோடு மாநகராட்சியில் பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் 'கியூஆர்' கோடு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதனை வீடு, வீடாக சென்று ஒட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

'கியூஆர்' கோடு அறிமுகம்

உள்ளாட்சி அமைப்புகளில் பாதாள சாக்கடை திட்டம், குப்பை சேகரிப்பு, சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வதற்கும், அதுதொடர்பான புகார்களை ஆன்லைன் மூலமாக தெரிவிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. அதன்படி ஈரோடு மாநகராட்சியில் பொதுமக்கள் தங்களது புகார்களை ஆன்லைன் மூலமாக தெரிவிக்கவும், வரி விவரங்களை அறிந்து செலுத்துவதற்கும் கியூஆர் கோடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு வீடாக சென்று கியூஆர் கோடு ஸ்டிக்கர் ஒட்டும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த கியூஆர் கோட்டை பொதுமக்கள் தங்களது செல்போனில் ஸ்கேன் செய்து மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் முக்கிய திட்டங்களை அறிந்து கொள்ளலாம். மேலும், அதன் வழியாகவே புகாரையும் பதிவு செய்ய முடியும். ஆன்லைன் மூலமாக பதிவு செய்யப்படும் புகார்களை ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள் பார்வையிட்டு தீர்வு காண நடவடிக்கை எடுப்பார்கள். இந்த புகாரை சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாக துறை அலுவலகத்திலும் அதிகாரிகள் நேரடியாக பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

புகார் பதிவு

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

மாநகராட்சி, நகராட்சிகளில் மக்களுக்கு சிறந்த சேவை அளிக்கும் வகையில் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. அதன்படி பொதுமக்கள் எளிதாக புகார் அளிக்கவும், சேவைகளை பெறவும் கியூஆர் கோடு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த கியூஆர் கோட்டை வீட்டின் உரிமையாளர்கள் தங்களது செல்போனில் ஸ்கேன் செய்து, பாதாள சாக்கடை அடைப்பு, குடிநீர் வினியோக பிரச்சினை, குப்பை அகற்றப்படாதது உள்ளிட்ட புகார்களை பதிவு செய்யலாம். இதனால் பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்துக்கு நேரடியாக சென்று புகார் அளிக்க வேண்டிய அவசியம் இருக்காது.

இதேபோல் சொத்து வரி, குடிநீர் வரி, வணிகவளாக வாடகை கட்டணம் போன்றவற்றையும் செலுத்த முடியும். முதல் கட்டமாக ஈரோடு பெரியார் நகர், கச்சேரி வீதி, கருங்கல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் கியூஆர் கோடு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது. விரைவில் மாநகராட்சியின் 60 வார்டுகளிலும் இந்த ஸ்டிக்கர் ஒட்டப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story