ஈரோடு மாநகராட்சியில்தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை;மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை


ஈரோடு மாநகராட்சியில்தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை;மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை
x

ஈரோடு மாநகராட்சியில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஈரோடு

ஈரோடு மாநகராட்சியில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அவசர கூட்டம்

ஈரோடு மாநகராட்சி மாமன்ற அவசர கூட்டம் மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் தலைமை தாங்கினார். துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் ஈரோடு மாநகராட்சியில் கொசு ஒழிப்பு பணியின் அவசரம் கருதியும், பொதுமக்கள் காய்ச்சல், டெங்கு நோயால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும் கூடுதலாக 100 தற்காலிக கொசு ஒழிப்பு பணியாளர்களை நபர் ஒருவருக்கு ரூ.352 ஊதியத்தில் பணியமர்த்துவது என்பது உள்பட மொத்தம் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது பகுதி பிரச்சினைகள் குறித்து பேசும்போது கூறியதாவது:-

தெருநாய் பிரச்சினை

43-வது வார்டில் ஆடு வதை கூடம் உள்ளது. அங்கு ஏராளமான ஆட்டு இறைச்சி கடைகள் உள்ளன. ஆனால் இறைச்சி கடைகளிலும், வீதிகளிலும் ஆடுகளை வதை செய்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. ஆடுகளை வதை கூடத்தில் மட்டும் அறுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 43-வது வார்டில் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்யப்பட வேண்டும். பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு பல்வேறு இடங்களில் கழிவுநீர் சாலைகளில் ஓடுகிறது. இதை சரிசெய்ய வேண்டும்.

ஈரோடு மாநகராட்சியில் தெரு நாய்களால் பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவரை கிருஷ்ணம்பாளையம் காலனியில் தெருநாய் கடித்தது. தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சோலாரில் அமைக்கப்பட்ட நாய் கருத்தடை மையம் நீண்ட நாட்களாக செயல்படாமல் உள்ளது.

மேற்கண்டவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவுன்சிலர்கள் பேசினார்கள்.

கருத்தடை

அதற்கு பதில் அளித்து அதிகாரிகள் கூறியதாவது:-

தெரு நாய் பிரச்சினை தமிழகம் முழுவதும் உள்ளது. நாய்களுக்கு கருத்தடை செய்வதில் பல்வேறு நடைமுறை சிக்கல் உள்ளது. தற்போது கருத்தடை செய்வதற்கு தொண்டு நிறுவனம் ஒன்று முன்வந்து உள்ளது. மேலும், 1,000 நாய்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தினமும் 50 நாய்களுக்கு கருத்தடை செய்தாலும், அதை முழுமையாக கட்டுப்படுத்த 2 ஆண்டு காலம் ஆகிவிடும். விரைவில் ஈரோடு மாநகராட்சியில் நாய்களுக்கான கருத்தடை செய்யப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story