ஈரோடு மாவட்டத்தில் 201 மையங்களில் 52,806 பேர் குரூப்-4 தேர்வு எழுதினர்; 10,208 பேர் எழுதவில்லை


ஈரோடு மாவட்டத்தில்  201 மையங்களில் 52,806 பேர் குரூப்-4 தேர்வு எழுதினர்;  10,208 பேர் எழுதவில்லை
x

ஈரோடு மாவட்டத்தில் 201 மையங்களில் 52 ஆயிரத்து 806 பேர் குரூப் -4 தேர்வு எழுதினார்கள். 10 ஆயிரத்து 208 பேர் தேர்வு எழுதவில்லை.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 201 மையங்களில் 52 ஆயிரத்து 806 பேர் குரூப் -4 தேர்வு எழுதினார்கள். 10 ஆயிரத்து 208 பேர் தேர்வு எழுதவில்லை.

குரூப்-4 தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் -4 பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் 63 ஆயிரத்து 14 பேர் குரூப் -4 தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இவர்கள் தேர்வு எழுத வசதியாக மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, கொடுமுடி, மொடக்குறிச்சி, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், நம்பியூர் ஆகிய 9 தாலுகாக்களில் 201 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. ஒரு தேர்வு கூடத்தில் அதிகபட்சமாக 420 பேர் வரை தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

தேர்வு எழுதுபவர்கள் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையங்களுக்கு வர அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதனால் தேர்வர்கள் நேற்று காலை 7.30 மணி முதலே தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினர். தற்போது கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட்டது. தேர்வு எழுத வந்தவர்கள் முக கவசம் அணிந்து வந்தனர். முக கவசம் அணியாமல் வந்த ஒருசிலர் அவசர அவசரமாக அருகில் உள்ள கடைக்கு சென்று முக கவசம் வாங்கி அணிந்து வந்தனர்.

பறக்கும் படை

தேர்வு எழுத அடையாள அட்டையுடன் வந்தவர்களுக்கு தேர்வு மையத்தின் நுழைவு வாயில் பகுதியில் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது காய்ச்சல் அறிகுறி இருந்தவர்களுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். தேர்வர்கள் கருப்புநிற பந்து முனை பேனா மட்டும் தேர்வு மையத்திற்குள் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்பட்டனர். செல்போன், டிஜிட்டல் வாட்ச் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படவில்லை.

தேர்வு மையங்களை கண்காணிக்க 16 பறக்கும் படை அலுவலர்களும், 43 நடமாடும் குழுவும், 208 ஒளிப்பதிவாளர்களும், 201 கண்காணிப்பு அலுவலர்களும், பாதுகாப்பு பணிக்கென 260 போலீசார்களும் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்வு எழுதுபவர்கள் காலை 8.30 மணிக்கு தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

கலெக்டர் ஆய்வு

தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி 12.30 மணிக்கு நிறைவடைந்தது. அதன்பின்னர் 12.30 மணி முதல் 12.45 மணி வரை தேர்வர்கள் தங்களது ஓ.எம்.ஆர். சீட்டை சரியாக பூர்த்தி செய்து உள்ளார்களா? என்று பார்க்க நேரம் ஒதுக்கப்பட்டது.

அதன் பின்னர் ஓ.எம்.ஆர். சீட்டை சமர்ப்பித்து விட்டு தேர்வர்கள் தேர்வு அறையை விட்டு வெளியே சென்றனர். குரூப் -4 தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த 10 ஆயிரத்து 208 பேர் தேர்வு எழுத வரவில்லை. 52 ஆயிரத்து 806 பேர் தேர்வு எழுதினார்கள். முன்னதாக ஈரோடு அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் நடந்த குரூப் -4 தேர்வினை, மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் பள்ளிக்கூட தலைமை ஆசிரியை சுகந்தி உள்பட பலர் இருந்தனர்.

கோபி

குரூப்- 4-க்கான தேர்வு நேற்று கோபி பகுதியில் நடைபெற்றது. இதையொட்டி கோபி பகுதியில் 34 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 10 ஆயிரத்து 234 பேர் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பம் செய்திருந்தனர். ஆனால் நேற்று 8 ஆயிரத்து 774 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 1,460 பேர் தேர்வு எழுத வரவில்லை.

முன்னதாக கோபி சார்நிலை கருவூலத்தில் இருந்து வினாத்தாள்கள் போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த பகுதியில் உள்ள தேர்வு மையங்களுக்கு வருவாய்த்துறையினர் கொண்டு சென்றனர்.


Next Story