ஈரோடு மாவட்டத்தில் 1 லட்சத்து 60 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு கண்காணிப்பு அதிகாாி தகவல்


ஈரோடு மாவட்டத்தில்  1 லட்சத்து 60 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு  கண்காணிப்பு அதிகாாி தகவல்
x
தினத்தந்தி 21 Sept 2022 1:00 AM IST (Updated: 21 Sept 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

கண்காணிப்பு அதிகாாி தகவல்

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 1 லட்சத்து 60 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கப்பட உள்ளதாக கண்காணிப்பு அதிகாரி பிரகாஷ் தெரிவித்து உள்ளார்.

கூட்டம்

ஈரோடு மாவட்டத்தில் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித்துறை ஆணையாளரும், ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அதிகாரியுமான ஜி.பிரகாஷ் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள், நாட்டு சர்க்கரை, எண்ணெய் உற்பத்தி மற்றும் மாவுமில் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு தகுதியுடைய பயனாளிகளுக்கு எந்திரங்கள் கொள்முதல் செய்ய நிதிஉதவி அளிக்கப்பட்டு வருகிறது. அம்ரித் சரோவர் திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் 55 பணிகள் எடுக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் குட்டைகள் மேம்பாடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் 59 சதவீத வீடுகளுக்கு வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளது. தற்போது ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 60 ஆயிரம் வீட்டு இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

7 பணிகள்

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கூட்டு குடிநீர் திட்டங்களின் கீழ் தேவையான அளவு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்திற்கு அனுமதிக்கப்பட்ட 7 பணிகளும் 100 சதவீதம் முழுமையாக முடிக்கப்பட்டு உள்ளது. மழைநீர் வடிகால் தூய்மைப்படுத்தும் பணிகளில் இதுவரை 578 கிலோ மீட்டர் நீளம் பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினிசந்திரா, மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், ஆர்.டி.ஓ.க்கள் சதீஷ்குமார் (ஈரோடு), திவ்யபிரியதர்ஷினி (கோபி) உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story