ஈரோடு மாவட்டத்தில் பறவை காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்


ஈரோடு மாவட்டத்தில்  பறவை காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்  கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்
x

கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் பறவை காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருவதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

பறவை காய்ச்சல்

ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் நோய் உறுதியாகி உள்ளது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில், ஈரோடு மாவட்டத்தில் பறவை காய்ச்சல் தாக்குதல் எதுவும் இல்லை. பறவை காய்ச்சல் நோய், பறவை இனங்களை தாக்கும் வைரஸ் தொற்று நோய்.

இந்நோய் கோழி, வாத்து, வான்கோழி, நீர் பறவைகள், வனப்பறவைகளை தாக்கும். இந்த நோய் கிருமி பல வகையாக இருந்தாலும், 'எச்5என்1' என்ற வகை வைரஸ் கிருமி அதிக வீரியம் வாய்ந்தது. நோய் பாதித்த பண்ணைகளில் இறந்த கோழிகள், கோழிக்கழிவுகள், பண்ணை உபகரணங்கள், கோழித்தீவனம் மூலம் இந்நோய் பரவும். இந்நோய்க்கு சிகிச்சை எதுவும் இல்லை. நோய் வராமல் தடுக்க, நோய் தடுப்பு முறைகளையும், உயிர் பாதுகாப்பு முறைகளையும் பின்பற்ற வேண்டும்.

கிருமி நாசினி

கால்நடை பராமரிப்புத்துறை மூலம், ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகள், வெள்ளோடு பறவைகள் சரணாலயம், புறக்கடை கோழிகளை நேரில் கண்காணித்து, மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 50 அதிவிரைவு செயலாக்க குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இருப்பினும், கேரளாவில் இருந்து வாத்து, கோழி, கோழிக்குஞ்சு, முட்டை, கோழித்தீவனம், தீவனங்கள் தயாரிக்கும் மூலப்பொருட்களை வாங்க கூடாது.

கடந்த ஒரு மாதத்தில் இவ்வாறு முட்டை, தீவன பொருட்கள் வாங்கினால், அவற்றை அழிக்கலாம். பண்ணைக்குள் செல்வோர், கால்களை கிருமி நாசினியால் சுத்தம் செய்து செல்லலாம்.

அசாதாரண இறப்பு

பண்ணைக்கு வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்து அனுமதிக்க வேண்டும். பண்ணையில் இறந்த கோழிகளை உடனுக்குடன் கிருமி நாசினி தெளித்து புதைக்க வேண்டும். பண்ணைகளில் அசாதாரண இறப்பு இருந்தால், கால்நடை துறைக்கு தெரிவிக்க வேண்டும்.

பண்ணையாளர்கள் வேறு பண்ணைகள், பறவைகள் சரணாலயம் செல்வதையும், பண்ணைக்குள் பார்வையாளர்களை அனுமதிப்பதையும் தவிர்க்க வேண்டும். பிற மாநிலத்துக்கு முட்டைகளை எடுத்து செல்ல, காகித அட்டை பெட்டிகளை மட்டும் பயன்படுத்த வேண்டும். அந்த பெட்டிகளை திரும்ப எடுத்து வரக்கூடாது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story