ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு
ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக அமைச்சர் சு.முத்துசாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக அமைச்சர் சு.முத்துசாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
கும்பாபிஷேகம்
ஈரோடு கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற ஆருத்ர கபாலீஸ்வரர் (ஈஸ்வரன்) கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகத்திற்காக கடந்த சில ஆண்டுகளாக திருப்பணிகள் நடந்து வருகிறது. விரைவில் கும்பாபிஷேகம் நடந்த அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கும்பாபிஷேக பணிகள் குறித்து, தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் நேற்று ஆய்வு செய்தார். அப்போது கோவிலில் நடந்து முடிந்த பணிகள் குறித்தும், தற்போது நடந்து வரும் பணிகள் குறித்தும் பார்வையிட்டு, அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அமைச்சரிடம், சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் கோவில் கும்பாபிஷேகத்தை வருகிற செப்டம்பர் மாதம் 8-ந் தேதி நடத்தி முடிக்க வேண்டும், கோவிலில் உள்ள வன்னி மரத்தை பக்தர்கள் சுற்றி வரும் வகையில் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த ஆய்வின்போது, அமைச்சருடன் அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, உதவி ஆணையர் அன்னகொடி, கோவில் செயல் அலுவலர் ராஜகோபால் உள்பட பலர் உடன் இருந்தனர்.
பள்ளிக்கூட கட்டிடம்
ஈரோடு வீரப்பன்சத்திரம் குட்டைமேடு வீதியில் மாசிமலை ரங்கசாமி கவுண்டர் அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தின் கட்டிடம், பழுதின் காரணமாக சிமெண்டு சிலாப், மேற்கூரை போன்றவை இடிந்து விழுந்தது. இதைத்தொடர்ந்து மாணவிகளின் பெற்றோர்கள், பழுதான கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு, புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் மாசிமலை ரங்கசாமி கவுண்டர் அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் புதிய கட்டிடம் கட்டுவது தொடர்பாகவும், கூடுதல் கழிப்பறை வசதி கட்டுவது தொடர்பாகவும், அமைச்சர் சு.முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.