ஈரோடு மார்க்கெட்டுகளில்மஞ்சள் குவிண்டால் ரூ.2,100 உயர்வு


ஈரோடு மார்க்கெட்டுகளில்மஞ்சள் குவிண்டால் ரூ.2,100 உயர்வு
x

ஈரோடு மார்க்கெட்டுகளில் மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.2,100 உயா்ந்தது

ஈரோடு

ஈரோடு மார்க்கெட்டுகளில் மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 100 உயர்ந்து விற்பனை ஆனது.

ரூ.2,100 உயர்வு

தமிழகத்திலேயே ஈரோடு மாவட்டத்தில் தான் அதிகப்படியான மஞ்சள் விளைவிக்கப்படுகிறது. சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் மாவட்டத்தில் 4 இடங்களில் மஞ்சள் ஏலம் நடந்து வருகிறது. கடந்த 14-ந்தேதி நடந்த கடைசி ஏலத்தில் மஞ்சள் ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரத்து 500-க்கு விற்பனை ஆனது.

அதைத்தொடர்ந்து கடந்த 2 நாட்கள் விடுமுறை என்பதால் மஞ்சள் ஏலம் நடைபெறவில்லை. இந்த நிலையில் நேற்று ஈரோடு மார்க்கெட்டுகளில் மஞ்சள் ஏலம் வழக்கம்போல் நடந்தது. இதில் ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.2 ஆயிரத்து 100 வரை உயர்ந்து அதிகபட்சமாக ரூ.12 ஆயிரத்து 600-க்கு விற்பனை ஆனது.

விவசாயிகள் மகிழ்ச்சி

பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு 601 மூட்டைகளிலும், ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை கூடத்துக்கு 1,668 மூட்டைகளிலும், ஈரோடு ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு 633 மூட்டைகளிலும் விவசாயிகள் மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் விரலி மஞ்சள் குவிண்டால் ஒன்று குறைந்தபட்சமாக ரூ.8 ஆயிரத்து 569-க்கும், அதிகபட்சமாக ரூ.12 ஆயிரத்து 609-க்கும் விற்பனை ஆனது.

இதேபோல் கிழங்கு மஞ்சள் குவிண்டால் ஒன்று குறைந்தபட்சமாக ரூ.8 ஆயிரத்து 269-க்கும், அதிகபட்சமாக ரூ.11 ஆயிரத்து 850-க்கும் விற்பனை ஆனது. கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்துக்கு விவசாயிகள் யாரும் நேற்று மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வரவில்லை. விவசாயிகள் கொண்டு வந்திருந்த 2 ஆயிரத்து 902 மஞ்சள் மூட்டைகளில் 2 ஆயிரத்து 105 மூட்டை மஞ்சள் ஏலம் போனது. மஞ்சள் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story