ஈரோட்டில், கூலி உயர்வு வழங்கக்கோரி5-வது நாளாக சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்


ஈரோட்டில், கூலி உயர்வு வழங்கக்கோரி5-வது நாளாக சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
x

ஈரோட்டில், கூலி உயர்வு வழங்கக்கோரி 5-வது நாளாக சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்

ஈரோடு

ஈரோட்டில், கூலி உயர்வு வழங்கக்கோரி 5-வது நாளாக சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூலி உயர்வு

ஈரோடு பார்க் ரோடு, மூலப்பட்டறை, குப்பைக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 450-க்கும் மேற்பட்ட லாரி பார்சல் புக்கிங் அலுவலகங்கள் செயல்படுகின்றன. இங்கிருந்து ஜவுளி, மஞ்சள், விளை பொருட்கள், மாட்டு தீவனம், பேப்பர், அட்டை, போர்டு உள்பட பல்வேறு பொருட்கள் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இங்கு சுமை தூக்கும் பணியில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசியேசன் உடன், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு, பிற சலுகைகள் குறித்து ஒப்பந்தம் செய்வது வழக்கம். ஆனால் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்தம் செய்ய கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசியேசன் ஒத்துழைக்காததால், சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்த்தப்படவில்லை.

5-வது நாளாக போராட்டம்

எனவே 41 சதவீத கூலி உயர்வு, இரவு 8 மணிக்கு மேல் பொருட்கள் ஏற்றி, இறக்க இரவு சாப்பாட்டுக்கு ரூ.75 உள்ளிட்ட சலுகைகள் வழங்க உரிய ஒப்பந்தம் செய்ய கோரி சுமை தூக்கும் தொழிலாளர்கள் கடந்த 13-ந்தேதி முதல் வேலை நிறுத்தம் செய்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டம் நேற்று 5-வது நாளாக தொடர்ந்தது. இந்த போராட்டத்துக்கு ஈரோடு மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க தலைவர் தங்கமுத்து தலைமை தாங்கினார்.

இதில் ஈரோடு மாவட்ட சுமை தூக்குவோர் மத்திய சங்க பொதுச்செயலாளர் தென்னரசு, தமிழக பொது தொழிலாளர் சங்க தலைவர் மனோகரன், பொதுத்தொழிலாளர் மத்திய சங்க மாவட்ட பொதுச்செயலாளர் பொ.வை.ஆறுமுகம், தொழிற்சங்க நிர்வாகிகள் தங்கவேல், விஜயகுமார், ராஜு, கோபால் உள்பட ஏராளமான சுமை தூக்கும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். சுமை தூக்கும் தொழிலாளர் வேலை நிறுத்தம் காரணமாக, இதுவரை ரூ.200 கோடி மதிப்பிலான பல்வேறு பொருட்கள் ஏற்றி, இறக்க முடியாமல் குடோன்களிலும், லாரிகளிலும் தேங்கி கிடக்கிறது.


Next Story