எட்டயபுரம் பகுதியில் பயிர்களை சேதப்படுத்தும் மான், காட்டு பன்றிகள்: விவசாயிகள் கவலை
எட்டயபுரம் பகுதியில் பயிர்களை மான், காட்டு பன்றிகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
எட்டயபுரம்:
பருவமழை தொடங்கி இருப்பதால், எட்டயபுரம் தாலுகாவில் விவசாயிகள் தீவிரமாக விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பலநூறு ஏக்கர் நிலங்களில் மக்காச்சோளம், பருத்தி, உளுந்து, பாசிப்பயிறு உள்ளிட்ட பயிர்களை விவசாயம் ெசய்துள்ளனர்.
இந்த பயிர்கள் நன்கு வளர்ந்து வரும் நிலையில், நிலங்களில் மான்களும், காட்டு பன்றிகளும் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.
குறிப்பாக தலைக்காட்டுபுரம், ராமனூத்து, சிந்தலக்கரை, துரைச்சாமிபுரம், குமரட்டியாபுரம், மீனாட்சிபுரம், அய்யா கோட்டையூர், பிக்கிலிபட்டி, மேலகரந்தை பகுதியிலுள்ள கிராமங்களிலுள்ள விவசாய நிலங்களில் மான்களும், காட்டு பன்றிகளும் பயிர்களை சேதப்படுத்தி உள்ளன.
பல ஆண்டுகளாக இப்பகுதியில் தொடரும் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினரும் விடுத்த கோரிக்கையை ஏற்று நேற்று வனத்துறையினர் மான்கள், காட்டு பன்றிகள் சேதப்படுத்திய விவசாய நிலங்களை பார்வையிட்டனர்.