எட்டயபுரம் பேரூராட்சியில் 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் சமாதான கூட்டத்தில் முடிவு


எட்டயபுரம் பேரூராட்சியில்  5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் சமாதான கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 22 Sept 2022 12:15 AM IST (Updated: 22 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரம் பேரூராட்சியில் 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் சமாதான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

எட்டயபுரம் பேரூராட்சி பகுதியில் 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படும் என தாலுகா அலுவலகத்தில் நடந்த சமாதான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம்

எட்டயபுரம் நகருக்கு 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். அடிக்கடி உடைப்பெடுக்கும் பழைய குடிநீர் குழாய்களை அகற்றி புதிய குழாய்கள் அமைக்க வேண்டும். நகரின் எதிர்கால குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு வல்லநாடு கூட்டுக் குடிநீர் திட்டத்தை எட்டயபுரம் நகருக்கு விரிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தி நாளை(வியாழக்கிழமை) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பேரூராட்சியை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

சமாதான கூட்டம்

இதுதொடர்பான சமாதான கூட்டம் எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கிருஷ்ணகுமாரி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் எட்டயபுரம் பேரூராட்சிக்கு தினமும் 7.5 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்படும் என கோவில்பட்டி குடிநீர் வடிகால் வாரிய உதவிப் பொறியாளர் உறுதி அளித்தார். வல்லநாடு திட்டத்தின் கீழ் எட்டயபுரம் புறவழிச்சாலையில் உள்ள குழாய் வழியாக 5 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்க கடந்த மார்ச் மாதம் எட்டயபுரம் பேரூராட்சி அலுவலகம் மூலம் பிரேரணை அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டருக்கும் பரிந்துரை கடிதம் அனுப்பப்படும். தரமான, ருசியான குடிநீர் கிடைக்க குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ஆற்றில் உள்ள நீரின் தரத்தை பரிசோதித்தும், மண் பரிசோதனை மேற்கொண்டு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம்

பழுதடைந்த குடிநீர் குழாய்களை சீரமைக்க ரூ.15 கோடி, பம்புசெட்டை சீரமைக்க ரூ.15 கோடி என மொத்தம் ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய அரசுக்கு கடந்த ஆகஸ்டு மாதம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எட்டயபுரம் பேரூராட்சி பகுதிகளில் 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட கட்சியினர் போராட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்தனர்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில், கோவில்பட்டி குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் மெர்சி, பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் ஜீவராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் ரவீந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story