திருச்செந்தூர் கோவிலில் ஆடி சுவாதியை முன்னிட்டு வெள்ளை யானை வீதி உலா


திருச்செந்தூர் கோவிலில் ஆடி சுவாதியை முன்னிட்டு வெள்ளை யானை வீதி உலா
x
தினத்தந்தி 27 July 2023 12:15 AM IST (Updated: 27 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் கோவிலில் ஆடி சுவாதியை முன்னிட்டு வெள்ளை யானை வீதி உலா நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி சுவாதியை முன்னிட்டு வெள்ளை யானை வீதி உலா வந்தது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

வெள்ளை யானை

ஆடி மாதம் சுவாதி நட்சத்திர தினத்தில் 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாருக்கு திருக்கைலாய மலையில் சிவபெருமான் ஐராவதம் (வெள்ளை யானை) உருவத்தில் காட்சி கொடுத்தார் என்பது ஐதீகம். இதை நினைவு கூறும் வகையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனையும், தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெற்றது.

மாலையில், கோவில் யானையின் உடல் முழுவதும் மாவு பூசி வெள்ளை நிறத்தில் யானையும், தங்கசப்பரத்தில் சுந்தரமூர்த்தி நாயனாரும் கோயிலில் இருந்து புறப்பட்டு சன்னதி தெரு, உள் மாடவீதி மற்றும் ரதவீதிகள் வழியாக உலா வந்து மீண்டும் கோவில் சேர்ந்தனர்.

திரளான பக்தர்கள் தரிசனம்

தொடர்ந்து கோவில் உள்பிரகாரத்தில் 108 மகாதேவர் சன்னதியில் வெள்ளை நிற யானை முன்பு சேரமாள்பெருமானும், சுந்தரமூர்த்திநாயனாரும் தனித்தனி பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில்முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


Next Story