சித்தோடு மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டுஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
சித்தோடு மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.
சித்தோடு மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.
தீர்த்தம் எடுத்து வருதல்
பவானி அருகே சித்தோட்டில் பழைய போலீஸ் நிலைய கட்டிடம் அருகே மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா நேற்று காலை 9 மணி அளவில் மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து வாஸ்து சாந்தி செய்யப்பட்டு, கோமாதா வழிபாடு நடந்தது. மாலை 5 மணிக்கு மேல் பவானி அருகே உள்ள வைரமங்கலம் பவானி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் என சுமார் 1,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தீர்த்தக்குடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக இரவு கோவிலை வந்தடைந்தனர்.
யாக பூஜை
இன்று (சனிக்கிழமை) காலை 8.30 மணி அளவில் யாகசாலை தொடக்க விழாவும், மாலை 4.30 மணிக்கு முளைப்பாரி படைக்க அம்மன் அழைத்து வரும் நிகழ்ச்சியும் மாலை 5 மணிக்கு முதல் கால யாக பூஜையும், விநாயகர் பூஜையும் நடைபெற உள்ளது.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு 2-ம் கால யாக பூஜையும், அஷ்ட பந்தனம் சாற்றுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
தொடர்ந்து கோபுர கலசம் வைத்து பூர்ணாகுதி நிகழ்ச்சியும், மாலையில் 3-ம் கால யாக பூஜையும் நடைபெற உள்ளது.
கும்பாபிஷேகம்
நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 6.30 மணி அளவில் 4-ம் கால யாக பூஜையும், தொடர்ந்து கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது. அதன்பின்னர் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
கன்னி மூல கணபதி, முகூர்த்த கணபதி, முனீஸ்வரர், பச்சையம்மன் ஆகிய பரிவார தெய்வங்கள் மற்றும் மாகாளியம்மன் கோவில் கோபுர கலசங்களுக்கு சித்தோடு பால தண்டாயுதபாணி கோவில் அர்ச்சகர் என்.சிவகுமார சிவம் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கிறார். அதைத்தொடர்ந்து அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.