கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்புபறையர் மக்கள் முன்னேற்ற கழகத்தினர் முற்றுகை போராட்டம்


கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்புபறையர் மக்கள் முன்னேற்ற கழகத்தினர் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 16 Jun 2023 12:15 AM IST (Updated: 16 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு பறையர் மக்கள் முன்னேற்ற கழகத்தினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

தெற்கு இலுப்பையூரணி தாமஸ்நகர் பகுதிக்கு சீவலப்பேரி குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கோவில்பட்டி உதவி கலெக்டர் முன்பு பறையர் மக்கள் முன்னேற்ற கழகத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று பறையர் மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியவாறு முற்றுகை போராட்டம் நடத்தினா். போராட்டத்திற்கு பொது செயலாளர் தாவீது ராஜா தலைமை தாங்கினார். நிறுவன தலைவர் சுடலைமுத்து பாண்டியன் முன்னிலை வகித்தார்.

கோரிக்கைகள்

5 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வரும் தெற்கு இலுப்பை யூரணி, தாமஸ் நகரில் பறையர் சமுதாய மக்களுக்கு ஒரு லட்சம் லிட்டர் குடிநீர் தேக்க தொட்டி அனுமதிக்கப்பட்டது. ஆனால், அந்த குடிநீர் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு வழங்காமல் வேறு பகுதிக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

பஞ்சாயத்து தலைவர் தேர்தல் நடந்து 4 ஆண்டுகள் ஆகியும் தாமஸ் நகர,் தெற்கு இலுப்பை யூரணிக்கு சீவலப்பேரி குடிநீர் வரவில்லை. உடனடியாக இப்பகுதி மக்களுக்கு சீவலப்பேரி குடிநீர் வழங்க வேண்டும். மீனாட்சிபுரம் கிராம பஞ்சாயத்து மேல காலனியில் வசித்து வரும் அம்பேத்கர் காலனி மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்.

கோவில்பட்டி தங்கம்மன் கோவில், அம்பேத்கர் தெருவில் வாறுகால், சாலை வசதி, தனியாக இடுகாடு அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

கலந்து கொண்டவர்கள்

போராட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் தங்க மாரியப்பன், மாநில அவைத் தலைவர் அரிய மூர்த்தி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஆரோக்கியம், ஆலோசகர் ஸ்டாலின், பொன்னுச்சாமி, நகரச் செயலாளர் பர்கத்அலி, மாவட்ட தலைவர் மதி, தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் மற்றும் நிர்வாகிகள், தெற்கு இலுப்பையூரணி தாமஸ்நகர் பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் கோரிக்கை மனுவை உதவி கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story