கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தீக்குளிக்க முயற்சி
கயத்தாறு பஞ்சாயத்து யூனியன் காப்புலிங்கம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட குமாரகிரியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 50). கூலி தொழிலாளி. இவர் நேற்று காலையில் மனைவி கலாவதியுடன் உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அலுவலக வளாகத்தில் திடீரென்று அவர் தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் மற்றும் போலீசார் உடனடியாக அவரிடமிருந்து கேனை பறித்து, அவரது உடலில் தண்ணீரை ஊற்றினார்கள்.
காரணம் என்ன?
தொடர்ந்து முருகேசனிடம் உதவி கலெக்டர் அலுவலக தலைமை எழுத்தர் ராமகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், நான் கடந்த 30 ஆண்டுகளாக எனது வீட்டின் பின்புறம் உள்ள நிலத்தில் கொட்டகை அமைத்து ஆடுகளை பராமரித்து வருகிறேன். இந்த இடம் நத்தம் புறம்போக்கு நிலமாகும். இந்த இடத்தை போலீசார் உதவியுடன் சிலர் போலி பத்திரம் மூலம் பிளாட் போட்டு விற்பனை செய்ய முயன்று வருகின்றனர்.
இதுகுறித்து கேட்ட என் மீது கயத்தாறு போலீஸ் நிலையத்தில் பொய் புகார் கொடுத்ததன் பேரில், விசாரணை என்ற பெயரில் போலீசார் அலைக்கழித்து வருகின்றனர்.
மேலும் எனது ஆட்டு கொட்டகையை சுற்றி கம்பி வேலி அமைத்து ஆடுகளை அடைக்க விடாமல் செய்துவிட்டனர். எனது அனுபவத்தில் உள்ள அந்த இடத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு தர உத்தரவிட வேண்டும் என்றார்.
அதிகாரி அறிவுறுத்தல்
உங்கள் கோரிக்கைகள் குறித்து முறையாக மனு அளிக்க வேண்டும். தீக்குளிப்பது உள்ளிட்ட சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபடக்கூடாது என அதிகாரிகள் அறிவுறுத்தினர். தொடர்ந்து முருகேசன் உதவி கலெக்டர் அலுவலகத்தில் தனது கோரிக்கை மனுவை கொடுத்துவிட்டு சென்றார்.