கோவில்பட்டி யூனியன் அலுவலகம் முன்புதோணுகால் ஊரக வேலை உறுதிதிட்டதொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்
கோவில்பட்டி யூனியன் அலுவலகம் முன்பு தோணுகால் ஊரக வேலை உறுதிதிட்ட தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி யூனியன் அலுவலகம் முன்பு நேற்று தோணுகால் ஊரக வேலை உறுதி திட்ட பெண் தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பெண் தொழிலாளர்கள் முற்றுகை
கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் முன்பு தோணுகால் கிராமத்தைச் சேர்ந்த ஊரக வேலைஉறுதி திட்ட தொழிலாளர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பியவாறு நேற்று காலையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்திற்கு பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் ராமலட்சுமி தலைமை தாங்கினார்.
கோரிக்கைகள்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வார்டு வாரியாக பிரித்து வேலை வழங்க வேண்டும். கடந்த 15 ஆண்டுகளாக எங்கள் கிராமத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் வார்டு வாரியாக பிரித்து வேலை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் எங்களுக்கு 3 வாரங்களுக்கு ஒரு முறை தான் பணி கிடைக்கும். இதில் இதுவரை எந்த ஒரு பிரச்சினையும் ஏற்பட்டது கிடையாது. இந்நிலையில் ஒரு தரப்பினர் சமூக ரீதியாக பிரித்து வேலை வழங்குவதாக சொல்வது முற்றிலும் பொய்யானது. எனவே வழக்கம்போல் வார்டு வாரியாக பிரித்து எங்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
அதிகாரி உறுதி
பின்னர் அவர்கள் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மூர்த்தியை சந்தித்து ேகாரிக்கை மனு கொடுத்தனர்.
இம்மனுவை பெற்றுக்கொண்ட அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.