தூத்துக்குடியில் போலீஸ் நிலையத்தின் முன்பு பெண் போலீசுக்கு அடி-உதை
தூத்துக்குடியில் போலீஸ்காரருடன் பழகியதால் ஆத்திரமடைந்த கணவர், போலீஸ் நிலையத்தின் முன்பு பெண் போலீசை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடியில் போலீஸ்காரருடன் பழகியதால் ஆத்திரமடைந்த கணவர், போலீஸ் நிலையத்தின் முன்பு பெண் போலீசை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மனைவி மீது தாக்குதல்
தூத்துக்குடியில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் போலீசின் கணவர் மத்திய ரிசர்வ் போலீசில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அவர் திடீரென மனைவி வேலைபார்க்கும் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். பின்னர் மனைவியை வெளியில் அழைத்து சரமாரியாக தாக்கினார். இதனால் அந்த பெண் போலீஸ் மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்த மற்ற போலீசார் அந்த பெண் போலீசுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து உள்ளனர்.
தப்பி ஓட்டம்
அப்போது மத்திய ரிசர்வ் போலீஸ்காரர், அதே போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய ஒரு போலீஸ்காரர் தனது மனைவியுடன் பழகி வருவதாகவும், அவரை வெளியில் அனுப்புமாறும் கூறி உள்ளார். இதைக்கேட்ட அந்த போலீஸ்காரர் அங்கிருந்து தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது.
அதன்பிறகு மத்திய ரிசர்வ் போலீஸ்காரரை அங்கிருந்த மற்ற போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
அதிகாரிகள் நடவடிக்கை
இந்த சம்பவம் குறித்து அறிந்த உயர் அதிகாரிகள் பெண் போலீசுக்கு விடுப்பு வழங்கியும், அவருடன் பழகிய போலீஸ்காரரை வேறு போலீஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்தும் உத்தரவிட்டு உள்ளனர்.
இந்த சம்பவம் தூத்துக்குடி போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.