சத்தியமங்கலம் ஒன்றிய அலுவலகம் முன்புபழங்குடியின மக்கள் தர்ணா போராட்டம்


சத்தியமங்கலம் ஒன்றிய அலுவலகம் முன்புபழங்குடியின மக்கள் தர்ணா போராட்டம்
x

தர்ணா போராட்டம்

ஈரோடு

சத்தியமங்கலம் ஒன்றிய அலுவலகம் முன்பு பழங்குடியின மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தெரு விளக்குகள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஒன்றியம் சிக்கரசம்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராமம் ராமபையலூர். இந்த கிராமம் மலை அடிவாரத்தில் உள்ளது. இங்குள்ள 46 பழங்குடியின குடும்பங்களுக்கு சூரிய ஒளி மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு கட்டி கொடுக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து அந்த வீட்டில் பழங்குடியின மக்கள் குடியேறி வசித்து வருகிறார்கள்.

ஆனால் பசுைம வீடுகளுக்கு இலவச சூரிய ஒளி மின்சக்தியை பயன்படுத்துவதற்கான மின் இணைப்பு மற்றும் அந்த பகுதியில் தெருவிளக்கு வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

தர்ணா போராட்டம்

மேலும் இந்த கிராமம் மலை அடிவாரத்தில் உள்ளதால் அடிக்கடி வனவிலங்குகள் புகுந்துவிடுகின்றன. இதனால் வனவிலங்குகளுக்கு பயந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இரவு 7 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே நடமாடமுடியாத நிலை உள்ளது. எனவே வீட்டுக்கு சூரிய ஒளி மின்சக்தியுடன் கூடிய மின் இணைப்பு மற்றும் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும் என பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனிடையே இந்த கோரிக்கையை வலியுறுத்தி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் பா.ஜ.க.வை சேர்ந்த அரவிந்த் சாகர் தலைமையில் ஒன்றிய அலுவலகம் முன்பு தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றி அறிந்ததும் ஒன்றிய அதிகாரிகள் மற்றும் சிக்கரசம்பாளையம் ஊராட்சி தலைவர் ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், 'மின் இணைப்பு மற்றும் தெருவிளக்கு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

இதில் சமாதானம் அடைந்த பழங்குடியின மக்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சத்தியமங்கலம் ஒன்றிய அலுவலகம் பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story