தூத்துக்குடி தூய பனிமயமாதா தங்கத் தேரோட்டத்தை முன்னிட்டுஅன்னையின் திருவுருவ சப்பர பவனி:திரளான பக்தர்கள் வழிபாடு
தூத்துக்குடி தூய பனிமயமாதா தங்கத் தேரோட்டத்தை முன்னிட்டு அன்னையின் திருவுருவ சப்பர பவனியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
தூத்துக்குடி தூய பனிமயமாதா தங்கத்தேர் பவனியை முன்னிட்டு நேற்று இரவு அன்னையின் திருவுருவ சப்பர பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
திருவிழா
தூத்துக்குடியில் அமைந்து உள்ள பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தில் 441-வது ஆண்டு பெருவிழா கடந்த மாதம் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் திருயாத்திரை திருப்பலிகள், இளையோர், முதியோர், மாற்றுத்திறனாளிகள், தொழிலாளர்கள், மீனவர்கள், வணிகர்கள் என பல்வேறு தரப்பு மக்களுக்கான சிறப்பு திருப்பலிகள், செபமாலை, மறையுரை நற்கருணை ஆசீர் நடந்தது. இந்த ஆண்டு தூத்துக்குடி மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தங்கத்தேர் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதனால் விழா நாட்களில் தினமும் ஒரு பிஷப் கலந்து கொண்டு சிறப்பு திருப்பலி நிறைவேற்றினர்.
சப்பர பவனி
விழாவின் 10-வது நாளான நேற்று காலை 4.30 மணிக்கு செபமாலை, 5 மணிக்கு முதல் திருப்பலியும், 5.45 மணிக்கு 2-ம் திருப்பலியும், 6.30 மணி, 7.30 மணி மற்றும் 8.30 மணிக்கு திருயாத்திரை திருப்பலிகளும், 9.30 மணிக்கு நற்செய்தி பணியாளர்களுக்கான சிறப்பு திருப்பலியும், 11 மணிக்கு இளையோருக்கான சிறப்பு திருப்பலியும், மாலை 5 மணிக்கு தோணி, விசைப்படகு, கட்டுமரத் தொழில்கள் சிறக்க சிறப்பு திருப்பலியும் நடந்தன. மாலை 6.30 மணிக்கு கோவா உயர்மறைமாவட்ட பிஷப் கர்தினால் பிலிப் நேரி தலைமையில் பெருவிழா சிறப்பு மாலை ஆராதனை நடந்தது. பின்னர் இரவு 9 மணிக்கு மேல் பேராலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ சப்பர பவனி நடந்தது. அப்போது, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அன்னையை ஆலயத்தை சுற்றி பவனியாக எடுத்து வந்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னையை வழிபட்டனர்.
இன்று தங்கத்தேர் பவனி
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பனிமய மாதா பெருவிழா இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இன்று காலை 4.30 மணிக்கு முதல் திருப்பலி நடக்கிறது. காலை 5.15 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா சிறப்பு கூட்டுத் திருப்பலியும், 7 மணிக்கு கோவா உயர்மறைமாவட்ட பிஷப் கர்தினால் பிலிப் நேரி தலைமையில் தங்கத்தேர் சிறப்பு திருப்பலி நடக்கிறது. இந்த திருப்பலி முடிந்ததும் நகர வீதிகளில் அன்னையின் தங்கத்தேர் பவனி நடக்கிறது. மதியம் 12.30 மணிக்கு கோவை பிஷப் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் தங்கத்தேர் நன்றி திருப்பலியும், மாலை 4 மணிக்கு இலங்கை மன்னார் மறைமாவட்ட பிஷப் இம்மானுவேல் பர்னாண்டோ தலைமையில் பெருவிழா நிறைவு திருப்பலியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பேராலய பங்குத்தந்தை குமார்ராஜா, உதவி பங்குத்தந்தை சைமன் ஆல்டஸ் மற்றும் பங்கு பேரவையினர், பங்கு இறைமக்கள் செய்து உள்ளனர்.
விடுமுறை
பனிமய மாதா பேராலய திருவிழவை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மாவட்ட, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. பக்தர்கள் வசதிக்காக சென்னை-தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயிலும் இயக்கப்பட்டு வருகிறது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்காக 10 இடங்களில் வாகன நிறுத்தும் இடங்களும் அமைக்கப்பட்டு உள்ளன.