தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்புவிவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடியில் 58 வயதை கடந்த விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று விவசாய தொழிலாளர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்ட அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் எம்.எஸ்.முத்து தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரவீந்திரன், பொருளாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.
கோரிக்கை
ஆர்ப்பாட்டத்தின்போது, விவசாயத்துக்கு என தனித்துறையை உருவாக்க வேண்டும், 58 வயதை கடந்த விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வழங்க வேண்டும், தகுதியுள்ள அனைவருக்கும் நில பட்டா, வீட்டு மனை பட்டா முதியோர் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், நகர்ப்புற வேலை உறுதி அளிப்பு திட்டத்தை அனைத்து நகர்புற பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாகவும், சம்பளத்தை ரூ.600 ஆகவும் உயர்த்தி குறைந்தபட்ச ஊதியத்தை சட்டமாக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர் இந்த கோரிக்கை அடங்கிய மனுவை மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசனிடம் வழங்கினர்.
கலந்து கொண்டவர்கள்
போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் புவிராஜ், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பூமயில், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைச் செயலாளர்கள் கந்தசாமி, தங்கராஜ், மாவட்ட துணை தலைவர்கள் முருகேசன், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.