கூடலூர் வனப்பகுதியில்15 ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படும் சோலார் மின்வேலி:சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
கூடலூர் அருகே 15 ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படும் சோலார் மின்வேலியை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.
கூடலூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் பெருமாள் கோவில் புலம், கழுதைமேடு, சுரங்கனார் வனப்பகுதி, கல் உடைச்சான் பாறை, ஏகலூத்து ஆகிய வனப்பகுதிகள் உள்ளன. இங்கு ஏராளமான விவசாயிகள் மானாவாரி நிலங்களில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த மலை அடிவார பகுதிகளில் மான், காட்டுப்பன்றி, கேளையாடு உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. அவை இரை தேடி அடிக்கடி விளைநிலங்களுக்குள் புகுந்து நாசம் செய்து வருகின்றன. இதனால் வனவிலங்குகளிடம் இருந்து விளைபொருட்களை பாதுகாக்க சோலார் மின்வேலி அமைக்க வேண்டும் விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கழுதைமேடு பகுதியில் இருந்து பெருமாள் கோவில் புலம் வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு சோலார் மின்வேலி கம்பி அமைக்கப்பட்டது. இந்த வேலி அமைக்கப்பட்ட ஒரு ஆண்டுக்குள் சேதமடைந்தது. அதன்பிறகு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. சேதம் அடைந்து 15 ஆண்டுகள் ஆகியும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. இதனால் வனவிலங்குகள் விளை நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
எனவே மலையடிவார பகுதியில் விளைநிலங்களுக்குள் வனவிலங்குகள் புகுவதை தடுக்க அகழிகள் மற்றும் புதிதாக சோலார் மின்வேலி அமைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.