கூடலூரில் அரசு நெல் கொள்முதல் நிலையம் தொடக்கம்: விவசாயிகள் மகிழ்ச்சி
கூடலூரில் அரசு நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கூடலூரில் வெட்டுக்காடு, கப்பா மடை, தாமரைகுளம், ஒட்டாண்குளம், பாரவந்தான், பி.டி.ஆர்.வட்டம், ஒழுகு வழி சாலை ஆகிய பகுதிகளில் விவசாயிகள் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதி விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கடந்த சில வருடங்களாக தனியார் நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வந்தனர். இந்த இடங்கள் விவசாய பணிகளுக்கு போதுமானதாக இல்லை. மேலும் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. விற்பனை செய்த நெல் மூட்டைகளை தார் பாய்கள் மூலம் மூடி வைக்க வேண்டிய அவலநிலை இருந்தது. இதன் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதுகுறித்து விவசாயிகள் மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம் கோரிக்கை மனு வழங்கினர். அதில் கூடலூர் பகுதி விவசாயிகளுக்கு அரசுக்கு சொந்தமான இடத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து கூடலூர் அருகே உள்ள அரசு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஆய்வாளர் மாளிகை வளாகத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் தேனி நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் செந்தில்குமார், கொள்முதல் அலுவலர் மற்றும் கண்காணிப்பாளர் நீலமேகம், கொள்முதல் நிலைய எழுத்தர் ராஜ்குமார் மற்றும் விவசாயிகள் நேற்று பூஜைகள் செய்து அரசு நெல் கொள்முதல் நிலையத்தை தொடங்கி வைத்தனர். 17 சதவீதம் ஈரப்பதத்துடன் 60 கிலோ எடையுள்ள சன்னரக நெல் ஒரு மூட்டை ரூ..1296-ம், குண்டு ரகம் 60 ஒரு மூட்டை ரூ.1269-க்கும் விற்பனை ஆகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.