கூடலூரில்கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி பாதியில் நிறுத்தம்:பொதுமக்கள் அவதி
கூடலூரில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
கூடலூர் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் இருந்து வரும் மழைநீர் 8-வது வார்டு ராஜீவ்காந்திநகர் பகுதியில் வந்து சேருகிறது. பின்னர் அங்கிருந்து அருகில் உள்ள ஓடை வழியாக வெளியேறுகிறது. சில நேரங்களில் மழைநீர் குடியிருப்புக்குள் சென்றுவிடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வந்தனர். இதுகுறித்து நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் சார்பில், அந்த பகுதியில் பேவர்பிளாக் சாலை அமைத்து கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி நடந்தது.
ஆனால் இந்த பணிகள் முழுவதும் நிறைவு பெறாமல் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் அந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களில் சென்று வர முடியவில்லை. நீண்டதூரம் சென்று சுற்றி வர வேண்டிய நிலை உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.