தேனியில் சி.ஐ.டி.யூ. சாலை மறியல்; தடையை மீறி ஊர்வலம்


தேனியில்  சி.ஐ.டி.யூ. சாலை மறியல்; தடையை மீறி ஊர்வலம்
x

தேனியில் சி.ஐ.டி.யூ. சார்பில் சாலை மறியல் நடந்தது

தேனி

தேனி மாவட்ட சி.ஐ.டி.யூ. சார்பில், சுதந்திர தினத்தையொட்டி தேனி பொம்மையகவுண்டன்பட்டி சாலை பிள்ளையார் கோவில் முன்பு இருந்து, நேரு சிலை சிக்னல் நோக்கி மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக செல்ல திட்டமிட்டனர். இந்த ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இருப்பினும் பொம்மையகவுண்டன்பட்டியில் நேற்று சி.ஐ.டி.யூ. அமைப்பினர் திரண்டனர். அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிலர் போலீசாரை கண்டித்து, மோட்டார் சைக்கிள்களை சாலையின் குறுக்காக நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு பால்சுதிர் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் தடையை மீறி நேரு சிலை நோக்கி ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலத்துக்கு மாவட்ட தலைவர் ஜெயபாண்டி தலைமை தாங்கினார். பின்னர் நேரு சிலை சிக்னல் அருகில் நடந்த நிகழ்ச்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாலபாரதி கலந்துகொண்டு பேசினார். இதில், மாவட்ட செயலாளர் அண்ணாமலை மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story