தேனியில்தூய்மை திருவிழா விழிப்புணர்வு ஊர்வலம்
தேனி அல்லிநகரம் நகராட்சி நிர்வாகம் சார்பில், தூய்மை திருவிழா விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கண்காட்சி நடந்தது.
தேனி அல்லிநகரம் நகராட்சி நிர்வாகம் சார்பில், தூய்மை திருவிழா விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கண்காட்சி நடந்தது. நகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கிய ஊர்வலத்தை நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன் தொடங்கி வைத்தார். இதில் துணைத்தலைவர் செல்வம், ஆணையாளர் வீரமுத்துக்குமார், சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம் மற்றும் கவுன்சிலர்கள் பலர் கலந்துகொண்டனர். மகளிர் சுயஉதவிக்குழுவை சேர்ந்த பெண்கள் பலர் கலந்துகொண்டு ஊர்வலமாக சென்றனர்.
இந்த ஊர்வலம் உழவர் சந்தை அருகில் நிறைவடைந்தது. பின்னர் அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் மகளிர் சுயஉதவிக்குழுவினர், பழைய பொருட்களில் இருந்து உற்பத்தி செய்யும் பொருட்களின் கண்காட்சி நடந்தது. இதில் பழைய தெர்மாகோல் அட்டைகளில் உருவாக்கப்பட்ட கலைநயமிக்க பொருட்கள், தேங்காய் சிரட்டையில் உருவாக்கிய பொருட்கள் போன்றவை காட்சிக்காக வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை மகளிர் குழுவினர் பார்வையிட்டனர். குப்பைகளாக வீசப்படும் பொருட்களை பயனுள்ள பொருட்களாக மாற்றுவது குறித்தும், வீடுகளில் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்குவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த ஊர்வலம் மற்றும் கண்காட்சி நடந்தது.