தேனியில்40 ஆட்டோக்களில் 'மியூசிக்கல் ஹாரன்கள்' பறிமுதல்
தேனியில் 40 ஆட்டோக்களில் ‘மியூசிக்கல் ஹாரன்கள்' பறிமுதல் செய்யப்பட்டன.
தேனியில் வாகனங்களில் 'ஏர் ஹாரன்' (காற்று ஒலிப்பான்) பயன்பாடு அதிகரித்துள்ளது. அத்துடன் ஆட்டோக்களில் அதிக சத்தம் எழுப்பும் 'ஹாரன்', இசை போன்று ஒலிக்கும் 'மியூசிக்கல் ஹாரன்' போன்றவை பயன்பாடும் அதிகரித்துள்ளது. இதனால் அதிக ஒலியால் மக்கள் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இதையடுத்து தேனியில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி தலைமையில் போலீசார் நேற்று ஆட்டோக்களை தணிக்கை செய்தனர். அப்போது விதியை மீறி பொருத்தப்பட்ட ஹாரன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆட்டோ டிரைவர்களுக்கு இதுதொடர்பான விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கினர். ஒரே நாளில் 40-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அப்போது சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துராஜ், ராஜாராம், நிலைய எழுத்தர் வேல்முருகன் மற்றும் போலீசார் உடனிருந்தனர். வாகனங்களில் இதுபோன்ற ஒலிப்பான்களை பயன்படுத்தி ஒலி மாசு ஏற்படுத்தினால், திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின்படி ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இனிவரும் நாட்களில் அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.