தேனியில்தீயணைப்பு துறைக்கு ஒதுக்கிய நிலம் அளவீடு பணி
தேனியில் தீயணைப்பு துறைக்கு ஒதுக்கிய நிலம் அளவீடு பணி நடந்தது.
தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் அருகில், புதிதாக சார்பதிவாளர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. அதன் அருகில் தேனி தீயணைப்பு நிலையத்துக்கு புதிதாக கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தில் தீயணைப்பு துறை சார்பில், தீயணைப்பு நிலையம் கட்டுவதற்கான இடம் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருந் தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த அறிவிப்பு பலகை மாயமானது.
தகவல் அறிந்ததும் அங்கு தீயணைப்பு துறையினர் வந்து பார்வையிட்டனர். இதுகுறித்து தீயணைப்பு துறை சார்பில் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த நிலத்தில் தனிநபர் ஒருவர் பொக்லைன் எந்திரம் மூலம் அங்கிருந்த மரங்களை அகற்றி, நிலத்தை சமன் செய்து கொண்டிருந்தார். தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் அங்கு வந்து அந்த பணியை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அங்கு நேற்று நிலம் அளவீடு பணி மேற்கொள்ளப்பட்டது. வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடந்த அளவீட்டு பணியை தொடர்ந்து அந்த நிலம் தீயணைப்பு துறைக்கு ஒதுக்கிய அரசு நிலம் தான் என்று வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.