தோட்டக்கலைத்துறை திட்டங்களில் மானியம் பெற இணைய பதிவு அவசியம்
தோட்டக்கலைத்துறை திட்டங்களில் மானியம் பெற இணைய பதிவு அவசியம் என துணை இயக்குனா் தெரிவித்தார்
தேனி தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் (பொறுப்பு) சீத்தாலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேனி மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை கீழ் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டம், மானாவாரி பகுதி மேம்பாடு, மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டங்களில் சொட்டுநீர் பாசனம் அமைத்தல் மற்றும் துணை நீர் மேலாண்மை பணிகள் மேற்கொள்ள 75 சதவீதம் அல்லது 100 சதவீத மானியம் வழங்கப்படும். இந்த மானியம் பெற விரும்பும் விவசாயிகள் இணையதளம் வாயிலாக பதிவு செய்தால் மட்டுமே மானியங்கள் பெற முடியும். இதற்காக தோட்டக்கலை துறையின் http://tnhorticulture.tn.gov.in/tnhortnet/ என்ற இணையதளம் மூலம் விவசாயிகள் விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழியில் பதிவு செய்ய தெரியாத, இயலாத விவசாயிகள் அந்ததந்த வட்டாரத்தில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பதிவு செய்து பயன் அடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.