தொழில் நிறுவனங்களில் பணியாளர்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்த உத்தரவு
தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் நிறுவனங்களில் பணியாளர்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்த வேண்டும் என்று தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் கூறி உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் நிறுவனங்களில் பணியாளர்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்த வேண்டும் என்று தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் கூறி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
இருக்கை வசதி
சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் உத்தரவின் பேரில் தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் (திருத்தம்) சட்டம் 2021-ன் படி தொழில் நிறுவனங்களில் பணியாளர்களுக்கு இருக்கை வசதிகள் ஏற்படுத்தும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
ஆகையால் பணியாளர்களை பணியமர்த்தி உள்ள அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களில் அனைத்து ஊழியர்களுக்கும் பொருத்தமான இருக்கை ஏற்பாடு செய்து கொடுப்பது தொடர்பான சட்ட திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு அனைத்து தொழில் நிறுவன உரிமையாளர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பெயர் பலகை
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்களில் பெயர் பலகைகள் தமிழ் மற்றும் இதர மொழிகளில் இருந்தாலும் எழுத்து மற்றும் எழுத்துருக்களின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் தமிழில் பெயர் முன்னுரிமை பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்களின் அளவு 5:3 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். பெயர் பலகையில் மேலும் ஒரு மொழி சேர்க்கப்பட்டு இருந்தால், தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழி எழுத்துக்களின் அளவு 5:3:2 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். இந்த சட்டவிதிகளை மீறும் நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.