கடம்பூரில் பழங்குடியின சாதி சான்றிதழ் கேட்டு போராடியவர்களிடம் கலெக்டர் பேச்சுவார்த்தை
கடம்பூரில் பழங்குடியின சாதி சான்றிதழ் கேட்டு போராடியவர்களிடம் கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினாா்
சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைக்கிராமத்தில் வசிக்கும் மலையாளி இன மக்களுக்கு தற்போது ஓ.சி சாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தங்களுக்கு மலையாளி பழங்குடியின (எஸ்.டி.) சான்றிதழ் வழங்கக்கோரி நேற்று முன்தினம் காலையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கோபி ஆர்.டி.ஓ., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மாவட்ட கலெக்டர் நேரில் வந்து எங்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர். இதனால் இரவிலும் தொடர்ந்து நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று இரவு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாவட்ட கலெக்டர் கூறுகையில், 'கடம்பூர் மலைக்கிராமங்களில் வசிக்கும் மழை வெள்ளாளர் சமுதாயத்தினருக்கு மலையாளி பழங்குடியினர் (எஸ்.டி.) சான்றிதழ் வழங்குவதற்கு, முன்னாள் மாவட்ட கலெக்டர் அறிக்கை சமர்ப்பித்து உள்ளதாகவும், இதில் மேல் நடவடிக்கை எடுக்க தான் முயற்சி செய்வேன்,' என்றும் தெரிவித்தார். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.