கடம்பூரில் பழங்குடியின சான்றிதழ் வழங்க கோரி மலைக்கிராம மக்கள் போராட்டம்; திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு


கடம்பூரில் பழங்குடியின சான்றிதழ் வழங்க கோரி மலைக்கிராம மக்கள் போராட்டம்; திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 19 Jun 2023 9:38 PM GMT (Updated: 20 Jun 2023 2:58 AM GMT)

கடம்பூரில் பழங்குடியின சான்றிதழ் வழங்க கோரி மலைக்கிராம மக்கள் போராட்டம் நடத்தினா்

ஈரோடு

கடம்பூரில் பழங்குடியின சான்றிதழ் வழங்க கோரி மலைக்கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சான்றிதழ்

சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன, இந்த கிராமங்களில் மலையாளி இன மக்கள் அதிகமாக வசிக்கின்றனர்.

இந்த இன மக்களுக்கு வருவாய்த்துறை சார்பில் இதர வகுப்பினர் (ஓ.சி.) என சாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது. தங்களுக்கு 'தாழ்த்தப்பட்ட பழங்குடியினர்' (எஸ்.டி.) என சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பள்ளி புறக்கணிப்பு

கடந்த சில நாட்களுக்கு முன்பு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன.

ஆனால், கடம்பூர் மலைப்பகுதியில் வசிக்கும் மலையாளி இன மக்களுக்கு 'தாழ்த்தப்பட்ட பழங்குடியினர்' சான்றிதழ் வழங்க வலியுறுத்தி, அந்த இனத்தை சேர்ந்த மலைக்கிராம மக்கள் கடந்த சில நாட்களாகவே தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளி புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வந்தனர்.

போராட்டம்

இந்த நிலையில் கடம்பூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மலையாளி பழங்குடியின மக்கள் ஒன்று திரண்டு நேற்று காலை கடம்பூருக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் அங்கிருந்த பஸ் நிலையம் அருகே மலைவாழ் எஸ்.டி. மலையாளி மக்கள் நலச்சங்கத்துடன் இணைந்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களுக்கு தாழ்த்தப்பட்ட பழங்குடியின பொதுமக்கள் சான்றிதழ் வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மலையாளி இனத்தை சேர்ந்த 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகள், ஆண்கள், பெண்கள் 'வழங்கு வழங்கு மலையாளி எஸ்.டி சான்று வழங்குக" என்ற வாசகங்கள் உள்ளடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கலந்து கொண்டனர்.

சாலை மறியல்

ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த எந்த அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வரவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த மலையாளி இன மக்கள் கடம்பூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக 1 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று கல்கடம்பூரில் உள்ள சத்தியமங்கலம்- கடம்பூர் சாலையை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்த தகவல் கிடைத்ததும் கோபி ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்ஷினி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை.

இரவிலும் தொடர்ந்தது

இந்த நிலையில் நேற்று மாலை திடீரென மழை பெய்தது. எனினும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சாலை மறியல் போராட்டத்தை மலைக்கிராம மக்கள் தொடர்ந்தனர். பின்னர் இரவு 8.30 மணிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கடம்பூருக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதிலும் முடிவு ஏற்படவில்லை.

இதுபற்றி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், 'மாவட்ட கலெக்டர் இதுதொடர்பாக நேரில் வந்து எங்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும்,' என்றனர்.

இதைத்தொடர்ந்து இரவிலும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.


Next Story